சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவி சண்முகம், பாஜகவை மிக கடுமையாக பேசியிருந்தார். இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையில் கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பாஜகவுக்கு எதிராக பேசும் அதிமுகவினர் கொங்கு மண்டலத்தை தவிர்த்து பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான் இருப்பார்கள். குறிப்பாக வட மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தலைவர்கள் தான் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக பேசி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவார்கள்.
இதில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக தலைவர்கள் பாஜகவில் கூட்டணியை தொடர்வதையே விரும்புவதால், அவர்கள் யாரும் பாஜகவை விமர்சனம் செய்வது கிடையாது. இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் பாஜக வலுவாக இருக்க கூடிய இடம் கொங்கு மண்டலம், மேலும் பாஜகவுக்கு என ஒட்டு வாங்கி கொங்கு மண்டலத்தில் இருப்பதால், அவர்கள் கூட்டணியில் தொடர்ந்தால் தான் கொங்கு மண்டலத்தில் அதிமுக தன்னுடைய இடத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியும் என்று நன்கு உணர்த்தவர்கள் கொங்கு மண்டல அதிமுக தலைவர்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக பல இடங்களில் தோல்வியை தழுவினாலும், கொங்கு மண்டலத்தில் மட்டும் அதிமுக வலுவான வெற்றியை பெற்றதற்கு காரணம் அதிமுக – பாஜக கூட்டணி தான். பாஜக உடன் கூட்டணி இல்லாமல் அதிமுக தேர்தலை சந்தித்து இருந்தால், பாஜக வாக்குகள் பிரிந்து இருக்கும், இதனால் கொங்கு மண்டலத்தில் அதிமுக முழு வெற்றியை பெற்று இருக்காது.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் மட்டுமே அதிமுக வலுவாக இருக்கிறது என்பதால், கொங்கு மண்டல் பாஜக தலைவர்கள் ஆதரவுடன் தன்னை அதிமுகவில் ஒற்றை தலைமையாக முன்னிலை படுத்தி. பன்னீர் செல்வதை வெளியேற்ற முடிவு செய்தார் எடப்பாடி. இந்நிலையில் எடப்பாடி அணியில் இருக்கும் கொங்கு மண்டல் தவிர்த்து பிற பகுதியில் இருக்கும் அதிமுக முக்கிய தலைவர்கள் பெரும்பாலானோர் எடப்பாடி தலைமையை விருப்பம் இல்லாமல் தான் ஏற்று கொண்டுள்ளார்கள் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
ஜெயலலிதா அமைச்சரவையில் தங்களுக்கு சமமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் கைகட்டி நிற்பதை குறிப்பாக அதிமுக வடமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் விரும்பவில்லை. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து பாஜகவை கழட்டி விட்டால் கொங்கு மண்டலத்தில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்,
மேலும் எடப்பாடி ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதாவோ கிடையாது, கூட்டணி கட்சி தயவால் தான் வெற்றி பெற்றார் என்பதை நன்கு அறிந்த வட மாவட்டத்தை சேர்ந்த சிவி சண்முகம், கே பி முனுசாமி போன்ற அதிமுக முக்கிய தலைவர்கள் பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்கு பல வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.
அதிமுகவிலிருந்து பாஜகவை வெளியேற்றி விட்டால் கொங்கு மண்டலத்தில் அதிமுக தோல்வியை சந்திக்கும். அதன் பின்பு அதிமுக கொங்கு மண்டலத்தில் தான் வலுவாக இருக்கிறது என்கின்ற தோற்றம் உடைக்கப்பட்டு எடப்பாடியை காலி செய்வதுதான் இவர்களின் திட்டம் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் அதிமுக முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.