தமிழகம் கல்வியின் அடித்தளமே கிறிஸ்தவர்கள் தான்.!ஜெருசலேம் புனிதப்பயண உதவித்தொகை உயர்த்தப்படும்.! முதல்வர் பேச்சு.!

0
Follow on Google News

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 1000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது:- கிறிஸ்தவ மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் எனது தலைமையிலான அரசு பரிசீலனை செய்து நிறைவேற்றும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்திலும் சரி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளோம்.

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 2018-2019 முதல் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 500லிருந்து 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி அது 1000 ஆக உயர்த்தப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இது வரை 4,328 கிறிஸ்தவர்கள் ரூ.8.25 கோடி செலவில் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

புனிதப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணக்கட்டணம் உயர்ந்துள்ளது என கோரிக்கை வைத்தீர்கள். அந்த கோரிக்கை ஏற்று ரூ.20,000லிருந்து ரூ.37,000 ஆக புனிதப்பயண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. கிறிஸ்துவ தேவாலயங்கள் புனரமைப்பு மற்றும் பழுது நீக்கும் மானிய உதவித் தொகை திட்டத்தின் கீழ் 25 தேவாலயங்கள் ரூ.55 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற விதவைகள், வயதான பெண்கள் நலனுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சங்கங்கள் நன்கொடை மூலம் திரட்டும் நிதி ஆதாரத்திற்கு ஏற்ப, இணை மானியம் இருமடங்காக 1:2 என்ற விகிதாச்சாரத்தில், ஒரு வருடத்திற்கு ஒரு சங்கத்திற்கு ரூ.20 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இச்சங்கங்களுக்கு முதல் தொகையாக ஒவ்வொரு சங்கத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதற்காக ரூ.2.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமுதாயத்தினர் பொருளாதாரத்தை உயர்த்தவும், வாழ்க்கை தரத்தை மேம்பாடு அடையச் செய்யும் வகையிலும் அடிப்படை வசதிகள் வழங்க ரூ.42.68 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் நலத்துறையின் மூலமாக பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2011 முதல் இதுநாள் வரை சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த 37,14,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ.884.36 கோடி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு உதவிகளை அம்மாவின் அரசு கிறிஸ்தவ பெருமக்களுக்காக வழங்கி வருகிறது என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

கிறிஸ்தவ மக்களிடம் மிகுந்த ஒழுக்கம் காணப்படுகிறது. இது போற்றுதலுக்குரியது. இன்றைக்கு தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், அன்றையில் இருந்து இன்று வரை கிறிஸ்தவ பெருமக்களின் பள்ளி ஒரு கட்டுப்பாட்டோடு, சிறப்பான கல்வி கிடைக்க ஒரு சூழ்நிலை இருக்கிறது. நாங்கள் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூட சர்ச் பார்க் காண்வெண்டில் தான் படித்தார். என்னுடைய மகனும் ஏற்காடு மோன்ஃபோர்டு பள்ளியில் படித்தார். அந்த பள்ளியில் ஒழுக்கம் மிகவும் பேணப்படும். கல்வியும் தரமாக இருக்கும். ஆகவே இன்றைக்கு தமிழகம் கல்வியில் உயர்ந்திருப்பதற்கு அடித்தளமாக இருப்பது கிறிஸ்தவர்களுடைய முயற்சி. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.