5ஜி அலை அலைக்கற்றை மூலம் கொரோனா பரவுகிறதா.? தொலைதொடர்பு துறை விளக்கம்..

0
Follow on Google News

5ஜி தொலைபேசி கோபுரங்களின் சோதனையால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பரவியிருப்பதாக தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவுவதாக தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என குறிப்பிட்டுள்ளது.

5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொவிட்-19 தொற்றின் பரவலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதுடன், இதுபோன்ற தவறான தகவல்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற புரளிகளுக்கு எந்த விதமான அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை.

5ஜி இணைப்பின் சோதனை இன்னும் இந்தியாவில் எங்கும் தொடங்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே இதுபோன்ற கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை.தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும், அயனிகளை உருவாக்காத ரேடியோ அலை வரிசையில் மிகக் குறைந்த அளவிலான ஆற்றலே இருப்பதால், மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் உயிரணுக்களில் இதனால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

ரேடியோ அலைவரிசையின் வெளியேற்றத்திற்கு தொலைத்தொடர்புத் துறை நெறிமுறைகளை வகுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் பேரில் அயனிகளை உருவாக்காத கதிர்வீச்சு பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையம் வகுத்துள்ள பாதுகாப்பு வரம்புகளை விட இது 10 மடங்கு பாதுகாப்பானது என மத்திய தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது.