முதுகில் ஏற்பட்ட காயத்ததுடன் பயிற்சியை மேற்கொண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு… தலைவர்கள் வாழ்த்து.

0
Follow on Google News

பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ என மொத்தம் 202 கிலோ எடையை அவர் தூக்கினார். மணிப்பூரைச் சேர்ந்த 26 வயதான மீராபாய் சானு, கடந்த 2018-ஆம் ஆண்டு முதுகில் ஏற்பட்ட காயத்தை அடுத்து மிக கவனமாக பயிற்சியை மேற்கொண்டார்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் அனைவரும் மீராபாயின் சாதனைக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020-இன் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் துவக்கியுள்ள மீராபாய் சானுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்”, என்று தெரிவித்தார்.

பதக்கத்துடன் ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கியுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, சானுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020-க்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான துவக்கத்தை கோரியிருக்க முடியாது. மீராபாய் சானுவின் மாபெரும் செயல்திறனால் இந்தியா குதூகலம் அடைந்துள்ளது. பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது”, என்று Cheer4India ஹேஷ் டேக்குடன் பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மீராபாய் சானுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், “மிகவும் நன்றி, 135 கோடி இந்தியர்களின் முகத்தில் புன்னகையைத் தவழச் செய்ததற்காக பிரதமர் திரு மோடி மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். முதல் நாள், முதல் பதக்கம்; நாட்டிற்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்”, என்று கூறினார்.

இந்திய விளையாட்டு ஆணையகம் முகநூல் வாயிலாக ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய திருமிகு மீராபாய் சானு, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, இந்த நாளிற்காக தாம் ஏராளமான தியாகங்களை செய்துள்ளதாகவும், தமது கடுமையான உழைப்பிற்குப் பலன் கிடைத்திருப்பதுடன் தமது கனவும் நிறைவேறியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமது சொந்த ஊருக்கு அருகில் உள்ள இம்பால் இந்திய விளையாட்டு ஆணையகத்தில் மீராபாய் பயிற்சியைத் தொடங்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மணிப்பூரில் உள்ள தமது இல்லத்தில் வெறும் ஐந்து வாரங்கள் மட்டுமே மீராபாய் சானு தங்கியிருந்திருக்கிறார். கீழ் முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக மும்பை சென்றதைத் தவிர ஏனைய நாட்கள் பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு கழகத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தில் அவர் 2017-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டார்.