ஒன்றுபட்ட செயல்பாடு.. கொரோனாவை ஒழித்த கிராம மக்கள்.! மற்றவர்களும் பின்பற்றலாமே..

0
Follow on Google News

கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும்போது, மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘போயரே குர்த்’ என்ற சிறிய கிராமம் விழிப்புணர்வு, கொவிட் தடுப்பு நடவடிக்கை, தவறாத சுகாதார பரிசோதனை, தனிமைப் படுத்துதல் போன்ற நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றி கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது.

1,500 பேர் உள்ள இந்த சிறிய கிராமம், மக்களின் கூட்டு முயற்சி மூலம், கொரோனாவை ஒழிக்க முடியும் என்பதை நிருபித்து காட்டியுள்ளது. ஆரம்பத்தில், இந்த கிராமத்தில் நான்கு பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து இங்குள்ள கிராம பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை கொவிட் பரிசோதனை நடவடிக்கையைத் தொடங்கியது. கொவிட் அறிகுறியுள்ளவர்கள், சந்தேக நபர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளை கிராமத்தினர் பின்பற்றி, தற்போது தங்கள் கிராமத்தை கொரோனா இல்லாத கிராமமாக மாற்றியுள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மூலம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி அவ்வப்போது பரிசோதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில், இந்த கிராமத்தில் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

இங்குள்ள கோயிலின் ஒலி பெருக்கிகள் மூலம் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் காலையிலும், மாலையிலும் ஒலிபரப்பப்பட்டன. இது குறித்து இந்த கிராமத் தலைவர் திரு ராஜேந்திர அம்பேகர் கூறுகையில், ‘‘கொவிட் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடும் என்று சந்தேகப்படும் நபர்கள் எல்லாம் கிராமத்தில் அமைக்கப்பட்ட தனிமை மையத்துக்கு செல்லும்படி தூண்டப்பட்டனர். இந்த நடவடிக்கை கொரோனா பரவலை முறியடித்து, எங்கள் கிராமத்தை மே மாதத்துக்குள் கொரோனா பாதிப்பு இல்லாத கிராமமாக மாற்ற வழிவகுத்தது. எங்கள் கிராமத்தில் பின்பற்றப்படும் நடவடிக்கைகளை, பிற கிராமங்களும் பின்பற்றினால், கொரோனாவில் இருந்து விடுபட நீண்ட நாட்கள் ஆகாது’’ என்றார்.