சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பாரதியார் நகரைச் சேர்ந்தவர் காட்டுராஜா (75). இவரது மனைவி காசியம்மாள் (65). இவர்கள் தங்கியிருந்த வீடு கடந்த 12-ந் தேதி திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டுக்குள்ளிருந்தும் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், துரதிருஷ்டவசமாக தம்பதியர் இருவரும் உடல் கருகி அங்கேயே பலியானார்கள்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த தம்பதியரின் 16வயது பேரன்தான் அவர்களை தீ வைத்து உயிரோடு எரித்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவனை கைது செய்து வாக்குமூலத்தை பெற்றனர் போலீசார். அப்போது அவன் சொல்லும்போது, ‘எனக்கு படிப்பு என்பது சுத்தமாக வரவில்லை. எந்நேரமும் நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டே இருப்பேன். இதை என்னுடைய அப்பா, அம்மாகூட கண்டுகொள்ளவில்லை. ஆனால், தாத்தாவும் பாட்டியும் அடிக்கடி திட்டிக் கொண்டே இருந்தார்கள்.
என்னுடைய பெரியப்பா திமுக கட்சி பிரமுகர், அவரை ஒப்பிட்டு என்னை திட்டிக் கொண்டிருந்தனர். எங்கேயாவது வேலைக்கு போகவேண்டியதுதானே, இப்படி ஊரைச் சுற்றிக்கொண்ட இருக்காதே என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஒருகட்டத்தில் என்னை அடிக்கவும் செய்தார். இது எதையும் நான் பொருட்படுத்தவே இல்லை.
இந்நிலையில்தான், கடந்த 12-ந்தேதி இரவு மது அருந்திவிட்டு கொத்தாம்பாடி ஆற்று ஓரத்தில் பீடி குடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த என்னுடைய பாட்டி துடைப்பத்தாலும் குச்சியாலும் என்னை அடிச்சாங்க. கடுமையாகவும் திட்டினாங்க. என்னுடைய நண்பர்கள் முன்னாடி இதுவெல்லாம் நடந்ததால் எனக்கு ரொம்பவும் அவமானமாக போச்சு.
எனவே, இருவரையும் கொலை செய்ய திட்டம் போட்டேன். எங்கள் வீட்டில் இருந்த 2 லிட்டர் மண்ணெண்ணெயையும், ஒரு பூட்டையும் எடுத்துக்கொண்டு தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்றேன். அவங்க 2 பேரும் தூங்கும் வரைக்கும் காத்திருந்து, அவர்கள் தூங்கியதும், வெளிப்புறம் கதவை பூட்டிவிட்டு, கூரை வீட்டில் மண்ணெண்னையை ஊற்றி பற்ற வைத்துவிட்டு ஓடிவிட்டேன்’ இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவன் கூறியுள்ளான். இதையடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு, ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.