தி.மு.க.வில் கனிமொழிக்கு செக் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசுகையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையைக் கூறி அரசியலுக்கு வருவதைத் தவிர்த்து உள்ளார். அவர் அரசியலுக்கு வந்தாலும் வராமல் சென்றாலும் கழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ரஜினி ரசிகர் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.திமுக தலைவர் ஸ்டாலின் அவருடைய கட்சியில் உள்ள பிரச்சினைகளை மறைக்கக் அதிமுகவில் பிரச்சினை உள்ளதாகக் கூறிவருகிறார்.
திமுகவில் சீனியர்களுக்கு என்ன மரியாதை உள்ளது? பாட்டன், முப்பாட்டன், பேரன், கொள்ளு பேரன், எள்ளுப் பேரன் ஆகியோர் தான் கட்சித் தலைவராக முடியும். ஆனால் எங்கள் கட்சியில் கொடி பிடிக்கும் சாதாரண தொண்டன் உயர்ந்த பதவிக்கு ஏன் முதலமைச்சராகக் கூட வர முடியும். முதலமைச்சரும் அப்படித்தான். முதலமைச்சர் யார். சாதாரண விவசாயி. நான் யார்? டாட்டா பிர்லா பரம்பரையா? காசிமேட்டில் பிறந்தவன்.
திமுகவில் வாரிசுகளுக்கு தான் மரியாதை. உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். தற்போது திமுக தலைவர், அவரின் தந்தை படம், பெரியார், அண்ணா படத்தைப் போடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இது எல்லோருக்கும் தானே பொருந்தும். அதில் உதயநிதி படத்தைப் போடலாமா. அவருக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு. இது யாருக்கு வைக்கும் செக். துரைமுருகன், பொன்முடி, கனிமொழி ஆகியோரின் படத்தைப் போடக்கூடாது என்றால் இது முழுக்க முழுக்க கனிமொழிக்கு வைத்த செக் தான்.
கனிமொழி வருங்காலத்தில் கட்சியைப் பிடித்து விடுவாரோ என்று இன்றைக்கே மட்டம் தட்டும் பணிகள் அந்த குடும்பத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரங்கராஜன் குழுவின் அடிப்படையில் முதல்வர் பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளார். இதனைப் பொறுக்க முடியாமல் எப்படியாவது இந்த திட்டத்தைச் செயல்பட முடியாமல் நிறுத்த ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வரும் டோக்கனில் இரட்டைஇலை சின்னம் பொருத்தப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட போது கட்சியின் சின்னம் பொருத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் சின்னம் இருந்தால் மட்டுமே தவறு. அமைச்சர்கள் அரசாங்கத்தைச் சார்ந்தவர்கள். எனவே தவறு இல்லை. இந்த திட்டம் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதால் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. திசை திருப்ப நினைக்கிறது. கழகத்தின் சின்னத்தை முடக்க எந்த கொம்பனாலும் முடியாது. கழகத்தைப் பிரிக்க பல்வேறு நபர்கள் முயற்சி செய்தும் அசைக்க முடியவில்லை. சசிகலா சிறையிலிருந்து வந்தாலும் அவரால் எந்த பாதிப்பும் கழகத்தில் ஏற்படாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .