இவர்கள் முகத்தில் காறி உமிழ வேண்டும்.. கவிஞர் தாமரை ஆவேசம்..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை பத்மா சேசாத்ரி பள்ளி.ஆசிரியர் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து மீது உள்ள பாலியல் குற்றசாட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, பாடலாசிரியர் கவிஞர் தாமரை தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாலியல் தொடர்பான சர்ச்சை குறித்து மிக கட்டமாக அவருடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார், அதில்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல்கள்/வன்முறை மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தமுறை புண்ணியம் கட்டிக் கொண்டது பத்மா சேசாத்ரி பள்ளி. பாரம்பரியம் மிக்கதாகவும் சமூகத்தில் உயர்படியில் இருப்பதாகவும் தோற்றத்தைக் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது. வெட்கக்கேடு ! இதற்கு விளக்கம் வேறு தேவையா ? முன்னாள் மாணவிகள், விதயத்தைத் துணிந்து இணையத்தில் வெளியிட, தீ பற்றிக் கொண்டது. நல்லதுதான்… வேண்டியதுதான். ஆசிரியக் கோமகன் இராசகோபாலன் தற்போது சிறையில் !. எவ்வளவு வேகமான நடவடிக்கை ! கண்டிப்பாக வரவேற்க வேண்டும். கல்வித்துறை அமைச்சருக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள் !

அப்படியே கொஞ்சம் திரும்பி மற்ற கோப்புகளையும் பார்ப்போமா ?? மூன்றாண்டுகளுக்கு முன்பு சின்மயி உட்பட 13 பெண்கள் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மேல் வைத்த பாலியல் குற்றச்சாட்டின்போது ஊடகங்களும் சமூகமும் அரசும் அரசியல் இயக்கங்களும் பெண்ணுரிமைப் போராளிகளும் நடந்து கொண்டது எப்படி ?. சின்மயி பார்ப்பனர் என்கிற ஒரே காரணத்துக்காக அடித்துத் துவைக்கப் பட்டார். அவர் தொழில் பாதிக்கப்பட்டு தொந்தரவு கொடுக்கப்பட்டு அலைக்கழிக்கப் பட்டார். இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. தனியொரு பெண்ணாக நின்று போராடுகிறார்.

முகிலன் என்றோர் ஊரறிந்த ‘போராளி’… இசை என்ற பெண்ணை பாலியல்ரீதியாக ஏமாற்றி, தப்பிப்பதற்காக ஓடி ஒளிந்து கொண்டு ‘கடத்தல்’ நாடகம் ஆடுகிறான். எத்தனையெத்தனை அலப்பறை தமிழ்நாட்டில் !! அந்தப் பெண் முறையாகப் புகார் கொடுத்து, வழக்குப் பதிவான பிறகே போராளி கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டான். இப்போது பிணையில் வெளியே வந்து மீண்டும் ‘போராளி’ தொழில் ஆரம்பித்தாகி விட்டது.

அதற்கும் முன்னதாக, தோழர் தியாகு என்றழைக்கப்பட்ட, கைதேர்ந்த, முகிலனுக்கெல்லாம் முன்னோடி போராளி, பழம் தின்று கொட்டை போட்ட பெருச்சாளி, இயக்க வேலைகளுக்காகவும் பொதுவாக உதவிநாடியும் வந்தவர்களைத் தன்பிடியில் சிக்க வைத்துக் கொண்டு பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தமிழ்கூறும் நல்லுலகுக்கெல்லாம் தெரிந்த சங்கதி !. மெத்தப்படித்த மேதாவி சுபவீ முட்டுக்களவாணி என்பதுவும் அனைவரும் அறிந்ததுவே !.

ஆனால் நடந்தது என்ன ? நான் குழந்தையோடு தெருவுக்கு வந்ததுதான் மிச்சம். இன்றைக்கு ஆவேசமாக நெற்றிக்கண்ணைத் திறக்கும் நக்கீரர்களும், இழுத்து வந்து தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும் என்று பொங்கும் களஞ்சியங்களும் அன்று செய்தது என்ன ?. இராசகோபாலன்களுக்கும் வைரமுத்து தியாகு முகிலன்களுக்கும் என்ன வேறுபாடு ? ஒரு பார்ப்பனப் பொறுக்கி கிடைத்தால் மொத்துவீர்கள், திராவிடப் பொறுக்கிகளென்றால் ஒத்துவீர்களோ !! .

பாதிக்கப்படும் பெண்கள் வெளியே வந்து குரலெழுப்புவதே அரிது, அதிலும் எழுப்பும் பெண்களின் சாதி, மதம், நிறம், இடம், நிலை பார்த்துதான் உங்கள் விமர்சனம் இருக்குமோ ! எதற்கெடுத்தாலும், நீதிமன்றத்துக்குப் போ, காவல்துறையில் புகார் கொடு, சட்ட நடவடிக்கை எடு… பொதுவெளியில் பேசக்கூடாது, வாய்ப்பூட்டு போட்டுக் கொள்… முறையாகப் புகார் கொடுத்த சின்மயி இன்றுவரை போராடுகிறார், புகார் கொடுத்த இசை இன்றைக்கும் உயிராபத்தில் நிற்கிறார், எத்தனை அலைக்கழிப்பு அவமானம் நேரவிரயம் உடல்நலப் பாதிப்பு !

விமர்சனம் செய்யும் எந்தக் கோமாளிக்கும் காவல்நிலையத்துக்கு அலைவது, நீதிமன்றத்தில் காய்வது என்றால் என்னவென்று தெரியாது… போய்த்தான் பாருங்களேன் உங்கள் வீட்டிலிருந்து ஒரு வழக்கைப் பதிவு செய்து கொண்டு ! ஒரு பாலியல் குற்றம் நிகழ்கிறதெனில் சாதி மதம் சமூகநிலை பதவி பணபலம் எதையும் பாராமல் பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்க வேண்டும். அதுதான் அறம் !. மாறாக, பக்கம் பார்த்துதான் பொங்குவேன் என்றால் அதற்குப் பெயர் பச்சோந்தித்தனம் !.

குற்றம் புரிந்தவர்கள் எதுவுமே நடவாதது போல இளித்துக் கொண்டு மாலை மரியாதை பொன்னாடை பூமாலை விருது மேடை கைதட்டு என்று கொண்டாடிக் கொண்டிருக்க குற்ற இரைகள் ( victims) நொந்து நொம்பலப்பட்டு உடல்நலம் கெட்டு உயிருக்குப் பயந்து ஒடுங்கிப் போய்விடுகிறார்கள். இந்த இழவையெல்லாம் நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தியாகு விதயத்தில் பார்த்து விட்டதால்தான், அரசியல், பொதுவாழ்க்கை இவற்றிலிருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொண்டு ஒதுங்கி விட்டேன். போராட்டம் பொதுக்கூட்டம் போஸ்டர் தமிழ்த்தேசியம் தக்காளி ராச்சியம் என்று பேசிக் கொண்டு எந்தத் தறுதலையும் என்னை வந்து சந்திக்க முடியாத தொலைவில் நின்று கொண்டேன்.

இப்போதும் சொல்கிறேன்… செல்வாக்குப் பெற்றவர்களை சட்டரீதியாகத் தண்டிக்க முடியாது. ஆனால் சமூகரீதியாக தண்டிக்க முடியும். சமூகம் அவர்கள் முகத்தில் காறி உமிழ வேண்டும். வீட்டிலிருந்து வெளியே வந்தால், ‘த்தூ’ என்ற குரல்தான் அவர்கள் காதில் விழ வேண்டும். தியாகு சுபவீ முகிலன் போன்றவர்களை அம்பலப்படுத்த சரியான நேரத்துக்காக இன்னும் காத்திருக்கிறேன். ஆதாரங்களெல்லாம் தேவையான அளவு இருக்கிறது ராசா ! உண்மை அப்படியே உறங்கி விடாது. திடீரென்று தலையத் தூக்கிக் கொத்தும் !. எச்சரிக்கை என கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.