கடந்த அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டப்பட்டது. தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாட பட்டு வரும் தேவர் ஜெயந்தி விழாவில், இந்த வருடம் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட சிலர் எல்லை மீறி சென்றனர். சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழை போற்றுகின்ற தேவர் ஜெயந்தி விழாவில், அந்த ஜெயந்தி விழாவுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்தது சிலரின் எல்லை மீறிய செயல்.
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே அரசு பேருந்து கூறை மீது ஏறி நடனமாடியது, அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தது போன்ற சம்பவங்கள் அரங்கேறி பொது மக்களுக்கு இடையூறாக அமைந்தது. இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில், அரசு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது குறித்து மதுரை மாநகர காவல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை மாநகரில் கடந்த 30.10.2021 ஆம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது, பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நத்தம் செல்லும் அரசுபேருந்து மதியம் மதுரை டவுன், கோரிப்பாளையம் பஸ் நிறுத்தம், முதலியார் இட்லி கடை அருகில் சென்றபோது, தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மேற்கண்ட அரசு பேருந்தின் மீது ஏறி, பேருந்தில் ரகளை செய்து, பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர்.
இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் மற்றும் அரசு சொத்திற்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மேற்படி சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 28 நபர்கள் ட்ரோன் கேமரா பதிவுகள், போலிஸ் ஒளிப்பதிவுகள் மற்றும் CCTV கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
மேலும் தேவர் ஜெயந்திவிழா கொண்டாட்டங்களின் போது மதுரை மாநகரின் பல இடங்களில் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சுமார் 150 இரு சக்கர வாகனங்களை படம் பிடித்து வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி இ-சலான் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரைமாநகரில் தேவர் ஜெயந்திவிழா கொண்டாட்டங்களின் போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் ஓட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 112 இரு சக்கரவாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கரவாகனங்கள் மீது 13 இந்திய தண்டனை சட்டங்களின் கீழ் வழக்குகள், நான்கு 75 MCP வழக்குகள் மற்றும் 62 மோட்டார் வாகனச் சட்டவழக்குகள் உட்பட மொத்தம் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 1,36,600 / – அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.