ஊரடங்கு என்பது ஊர் சுற்றுவது அல்ல… வீட்டுக்குள் அடங்கி வாழ்வது தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார், மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த முழு ஊரடங்கு, நேற்று 14ஆம் தேதி முதல் கடுமையாக்கப்பட்டது; இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனாலும், சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்தும் பொதுமக்கள் நடமாட்டமும் சற்றும் குறையவில்லை. ஊரடங்கு என்ற ஒன்று நடைமுறையில் உள்ளதா? என்பதே தெரியவில்லை.
ஊரடங்கு என்றால் என்ன? என்பதே நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. ஊரடங்கு என்றால் சாலைகளில் வாகனங்கள் ஓடாது. அந்த நேரத்தில் நாம் மட்டும் நமது வாகனங்களில் ஜாலியாக வலம் வரலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. ஊரடங்கு என்றால், உயிர் போகும் சூழலில் அதைக் காப்பாற்றுவதற்கான தேவைகள் தவிர, வேறு எதற்காகவும் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்பது தான் அர்த்தம் ஆகும்.
காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும் என்றாலும் கூட, எல்லா நாளும் அந்தக் கடைகளுக்கு நாம் சென்று வர வேண்டும் என்று பொருள் அல்ல. ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு அருகில் உள்ள காய்கறி கடைக்கு சென்று அடுத்த வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேருங்கள். இது தான் ஊரடங்கை கடைபிடிக்கும் முறையாகும்.
அதை விடுத்து நான் எனது விருப்பம் போலத் தான் ஊர் சுற்றுவேன் என்றால், நீயும் கொரோனா தொற்றை வாங்கிக் கொண்டு அதை உன் வீடுகளில் உள்ள வயது முதிர்ந்தோர், குழந்தைகள் ஆகியோருக்கும் தொற்ற வைக்கிறீர்கள் என்று தான் பொருள் ஆகும். இதை விட ஆபத்தும், முட்டாள் தனமும் எதுவும் இருக்க முடியாது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகள் கொரோனாவை ஒழித்து விட்டன.
பிரேசில், அமெரிக்கா, அர்ஜென்டினா, ஜெர்மனி, துருக்கி, கொலம்பியா, ஈரான் ஆகிய 7 நாடுகளைத்ன் தவிர வேறு எந்த நாட்டிலும் தினசரி கொரோனா தொற்று 10 ஆயிரத்திற்கும் கூடுதலாக இல்லை. இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 6.92 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் சுமார் பாதி பேர், அதாவது 3.26 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
சுருக்கமாகக் கூற வேண்டுமானால் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மொத்தம் எத்தனைப் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்களோ, அதற்கு இணையான எண்ணிக்கையிலானவர்கள் இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் கொரோனாத் தொற்று இந்த அளவுக்கு பரவியிருப்பதற்கும், அதைக் கட்டுப்படுத்த முடியாததற்கும் முதன்மையான காரணம் முழு ஊரடங்கு, சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட எதையும் நாம் பின்பற்றுவது இல்லை என்பது தான்.
இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு உலகம் முழுவதற்கும் பல விஷயங்களில் முன்னுதாரணமாக உள்ளது. ஆனால், கொரோனா தடுப்பில் நாம் வாழ்த்துகளுக்கு உள்ளாவதில்லை…. மாறாக விமர்சனங்களுக்குத் தான் ஆளாகிறோம். இந்த நிலையை மாற்றுவோம். ஊரடங்கு காலம் நிறைவடையும் வரை வீடுகளில் அடங்குவோம். கொரோனாத் தொற்றை முற்றிலுமாக ஒழிப்போம். என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.