“தேர்தலுக்காக நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டு, இப்போது ‘டேட்டா கார்டு’ எனும் முதல்வர் பழனிசாமிக்கு தமிழக மக்கள் ‘டாட்டா’ காட்ட தயாராகி விட்டனர்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் மேலும் அவர் பேசுகையில், இங்கு நான் சிறப்புரையை அல்ல சுருக்க உரை ஆற்றவிருக்கிறேன். எப்போதும் பேச்சைக் குறைத்து நாம் செயலில் காட்ட வேண்டும் என்ற நிலையில் என்னை நான் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறேன், பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத காரணத்தால் மருத்துவக் கனவு கனவாகவே போய்விட்டது என்ற ஏக்கத்தின் காரணமாக மனம் வெதும்பி அரியலூர் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா என்ற சகோதரி தற்கொலை செய்து கண்டு மாண்ட கொடுமை நடந்தது. அதனைத் தொடர்ந்து பல மாணவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் அந்த நீட் தேர்வுக்கு முடிவு வரவில்லை.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம், அதன் நிலை என்னவென்று தெரியவில்லை; தட்டிக் கேட்கின்ற அரசு தமிழகத்தில் இல்லை. நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற போது, அந்த நீட் தேர்விலிருந்து எந்த முறையில் விலக்குப் பெற வேண்டுமோ, அந்த விலக்கைப் பெறுவோம் அதற்காக எங்களது சக்தி முழுவதையும் பயன்படுத்துவோம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதை என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று சொல்வார்கள். தை பிறக்கப் போகிறது. வழி பிறக்கப் போகிறது. தேர்தல் வருகின்ற காரணத்தால், முதலமைச்சர் பழனிச்சாமி தினமும் புதிய புதிய அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. இப்போது டேட்டா கார்டு தரப் போவதாக சொல்லியிருக்கிறார். டேட்டா கார்டு, டேட்டா கார்டு என்று சொல்லும் அவருக்கு டாட்டா காட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.