பாடலாசிரியர் தாமரை தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி கூறுகையில்.1997 இல் என் முதல் பாடலை எழுதினேன். அந்த ஆண்டையும் சேர்த்தால் இந்த 2021 எனக்கு வெள்ளிவிழா ஆண்டாகிறது. நான் தமிழ்த்திரைப் படங்களில் பாடல் எழுத ஆரம்பித்து 25 ஆண்டுகளைத் தொட்டு விட்டேன். வெற்றிகரமாகவும் அதிகம் விரும்பப்படும் பாடலாசிரியராகவும் இருக்கிறேன். இந்தியத் திரையுலகிலேயே முதல் தொழில்முறைப் பெண்பாடலாசிரியராக (First professional female lyricist) 25 ஆண்டுகளைத் தொட்டு இன்னும் உச்சத்தில் இருப்பது சாதனையே ! திரும்பிப் பார்த்தால் எனக்கே மலைப்பாக இருக்கிறது.
இலட்சோப இலட்சம் இரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்கூறும் இடங்களிலெல்லாம் என் பாடல் ஒலிக்காமல் இருக்கவே முடியாது. இதையொட்டி என் கதையை எழுதுமாறு/செவ்வி அளிக்குமாறு பல ஏடுகள்/ஊடகங்கள்வேண்டிய போதெல்லாம் மறுத்து விட்டேன். என்னைப் பற்றி ஆவணப்படம் எடுக்கவும் அணுகியுள்ளனர். ஆனால் என் சூழ்நிலையோ மனநிலையோ அதற்கு உகந்ததாக இல்லை. என் பாடல்களில் உள்ள மகிழ்ச்சியோ இனிமையோ என் வாழ்க்கையில் இல்லை.
எனவே அதை மறைத்து செயற்கையாக என்னை வெளிக்காட்டிக் கொள்வதில் உடன்பாடில்லை என்பதால் தவிர்த்து வந்தேன். இன்று நான் விரும்பியோ விரும்பாமலோ என் வாழ்க்கை பற்றிக் கூறும் நிலை வந்துள்ளது. எனவே என்னைப்பற்றி எழுத விரும்பியவர்கள் இவற்றைக் குறிப்புகளாக எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் படிக்காமல் கடந்து போய்விடலாம். திரைப்படங்களில்கூட காணாத நிகழ்வுகள் கொண்டது என் வாழ்வு !. சொன்னால் நம்பக்கூட முடியாத நிகழ்வுகள். எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது என்று தெரியாமல் திகைக்கிறேன்.
தியாகுவால் இப்போது திரி கிள்ளப்பட்டு இருப்பதால் அதைச் சுற்றியுள்ளவற்றை இப்போது கூறுகிறேன்.
அதுகூட மலைப்புதான் !. ஏனென்றால் தியாகுவை மையமாக்கினால் அதுவே ஒரு மகாபாரதம் போல கிளைக்கதை கிளைக்கதையாக விரியும். எதைச் சொல்ல எதை விட.. ??? தியாகு தொடர்பாகத்தான் எத்தனை நபர்கள், எத்தனை நிகழ்வுகள், எத்தனை பொய்கள், எத்தனை துரோகங்கள், எத்தனை பயங்கரம்….. இப்படிக்கூட ஒருவனால் இந்தப் புவியில் வாழ்க்கை நடத்தியிருக்க முடியுமா என்கிற அளவுக்குப் பித்தலாட்டம்…
தியாகு தனிநபரல்ல ! தாமரை என்கிற தனிநபருக்கும் தியாகு என்கிற தனிநபருக்கும் இடையே நடக்கும் குடும்பசண்டை என்றால் நான் இதை எழுதியே இருக்க மாட்டேன். தியாகு தன்னை ஓர் இயக்கத்தின் தலைவனாக, பொதுவாழ்க்கைப் பெட்டகமாக, சமூகத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட போராளியாக முன்னிறுத்துபவர். எனவே அந்த முத்திரையோடே அவரைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த முத்திரையின் பெயரால் செய்த அயோக்கியத்தனங்களை அம்பலப் படுத்த வேண்டியிருக்கிறது. இதுவும் ஒருவகையில் சமூகப்பணிதான்.
நானும் இன்னபிறரும் ஏமாந்து சிதைந்தது போல இனி எந்தப் பெண்ணும்/ஆணும் ஏமாறக் கூடாதென்கிற பொதுநோக்கம்தான். அத்தியாயம் அத்தியாயமாக எழுத வேண்டியவற்றை மட்டுப்படுத்தி,அவசரம் கருதி உடனடியாக சொல்ல வேண்டியதை மட்டும் இப்போது சொல்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறுகச் சிறுக சொல்லி வருகிறேன். தியாகு வீட்டை விட்டு இரண்டாவது முறையாக ‘இந்தப்பெண்’ணுடன் ஓடிய போது நான் தெருவுக்கு வந்து நியாயம் கேட்டுப் போராடினேன். கவனிக்கவும் : நியாயம் கேட்டுத்தான் போராடினேன், வீட்டுக்கு வந்து என்னோடு வாழும்படி போராடவில்லை.
ஒரு கணவன், தன் மனைவி குழந்தையை விட்டு அப்பட்டமாக இன்னொரு பெண்ணுடன் ‘ஓடிப்போக’ முடியாது என்பதை வலியுறுத்தவே போராட்டம். அப்போதிருந்து என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, நானும் முறையாகத் திருமணம் செய்யாத ‘சும்மா’ உடனிருக்கும் பெண்தானே என்பது !. இப்படியான தோற்றம் ஏன் எழுந்தது ?. ஏனென்றால் தியாகு எங்கேயும் என்னை மனைவி என்று குறிப்பிடாமல், பொதுவாகக் கவிஞர் என்றே அழைத்தும், முறையாகத் திருமணம் நடந்ததை அறிவிக்காமல் ‘சும்மா’ சேர்ந்து வாழ்வதைப் போன்ற தோற்றத்தையுமே ஏற்படுத்தி வந்திருக்கிறார். அதுகூட அறியாத அப்பாவியாக இருந்திருக்கிறேன்.
இப்போது அறிவிக்கிறேன் – தியாகுவும் நானும் முறையாகத் திருமணம் செய்தவர்கள். என் முதல் திருமணத்திலிருந்து நானும் அவரது திருமணத்திலிருந்து அவரும் முறையாக மணமுறிவு பெற்றிருக்கிறோம். அவரது திருமண முறிவுக்கு நானோ, என் திருமண முறிவுக்கு அவரோ காரணமில்லை. இருவரது முதல் திருமணங்களும் மடிந்து தொங்கிய நிலையில்தான் எங்கள் சந்திப்பே நிகழ்ந்தது. அதைப்பற்றி விரிவாகப் பிறகு கூறுகிறேன்.
எங்கள் திருமணம் எளிமையாக வீட்டிலேயே சடங்குகள் ஏதுமின்றி, உறுதிமொழி எடுத்து, நடந்தது. நடத்தி வைத்தவர் சென்னையின் புகழ்பெற்ற பெண் வழக்கறிஞர். ஒரு 10-15 பேர் கலந்து கொண்டிருந்திருப்பார்கள். அவர்களில் மூவர் இன்றைக்கு சமூகம் அறிந்த பிரபலங்கள். இருவர் குடும்பத்தோடு கலந்து கொண்டார்கள். தியாகுவின் தமிழ்த்தேசிய இயக்கத் தோழர்கள் இருவர். இது குறித்து மேலும் தேவைப்படும் தகவல்களை அடுத்த பதிவில் கூறுகிறேன்.
இங்கே என் முதல் திருமண முறிவுப் பத்திரம், தியாகுவின் திருமண முறிவுப் பத்திரம், எங்கள் இருவரின் திருமணப் பதிவு ஆவணம் ஆகியவற்றை வெளியிடுகிறேன். தியாகுவை முறையாக மணந்த, சட்டப்படியான மனைவி நான்தான். எனவே என்னையும் குழந்தை சமரனையும் ஏமாற்றி வீட்டை விட்டு ஓடியது சட்டப்படியும் தவறு, சமூகரீதியாகவும் தவறு !. தியாகு 2014 இல் ‘இந்தப் பெண்’ணுடன் ஓடிய பிறகு, இன்றுவரை நானும் சமரனும் தனித்து வாழ்கிறோம். தியாகு மீதான விசாரணை முடிவடையவில்லை.
ஓவியர் வீரசந்தனம் ஐயாவின் மறைவினால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. அவரிடம் கையளித்த கோப்பும் காணாமல் போய் விட்டது. சட்டபடி நான் இன்னும் தியாகுவின் மனைவிதான், தியாகு என் கணவர்தான் ! என் அனுமதியின்றி வேறொரு பெண்ணை அவர் மணமுடிக்க முடியாது. என்மீது இப்போது பொய்யான அவதூறுகளைப் பரப்பி வரும் தியாகுவின் உள்நோக்கம் என்னவென்பதை நான் அறிவேன். களங்கமற்ற வெள்ளைக் காகிதம் போன்றது என் வாழ்க்கை !. அதில் விழுந்த ஒரே கறை தியாகுதான் ! அவரது அவதூறுகளை என் வெண்மையின் சுடரால் எரிப்பேன்.