அணில் விவகாரம்.. நக்கல் செய்பவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..

0
Follow on Google News

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில். ‘மின் கம்பிகள் மீது படர்ந்துள்ள செடி வளர்ந்து, கம்பியோட மோதும் போது, அதில் அணில் ஓடுகிறது. அப்படி, அணில் லைனில் ஓடும்போது, இரண்டு லைன் ஒன்றாகி மின் தடை ஏற்படுகிறது’ என மின் தடை குறித்து விளக்கம் தெரிவித்துள்ளார். இந்த ‘வீடியோ’ நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. அதை பார்த்து, பலரும் சமூக வலைதளங்களில், அமைச்சர் செந்தில் பாலாஜியை நக்கல் அடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது டிவீட்டர் பக்கத்தில். மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? என மருத்துவர் ராமதாஸ் நக்கல் செய்திருந்தார்.

இதற்கு ராமதாஸ் நக்கல் பதிவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை – அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன – என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.

அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்!
அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்! பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது.

களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள்.
எந்தச் சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்! என விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணையில் தெர்மோகோள் விட்ட சம்பவம் கேலி கிண்டலுக்கு ஆளானது, அதே போன்று தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் அணில் விவகாரம் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.