தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் பாலியல் கொடுமை உலக அரங்கில் தமிழகத்துக்கு மிக பெரிய தலை குனிவை பெற்று தந்துள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 12ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமி, பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும் என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டத்தில் 17 வயது பாலியல் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதற்கு 5 நாட்களுக்கு முன்பு , கரூர் நகர் பகுதியில் உள்ள வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு வந்த மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்ற டாக்டர் ரஜினிகாந்த், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தகாத முறையில் நடந்து கொள்ள டாக்டர் ரஜினிகாந்த் முயற்சித்து உள்ளார். அவரிடம் இருந்து லாவகமாக தப்பிய மாணவி கூச்சல் போட்டுக்கொண்டே ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வெளியேறினார்.
இந்நிலையில் தனது தாயிடம் பாலியல் கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். போலீஸ் புகாரை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் டாக்டர் ரஜினிகாந்த் மற்றும் பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்த அவரது மேலாளர் சரவணன் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இப்படி ஒரு வார காலத்தில் இரண்டு மாணவிகளுக்கு கரூர் மாவட்டத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பெரும் துயரத்தில் அளித்தியுள்ளது.
இதே போன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பாப்பநாயக்கன்பட்டியில் கடந்த 2020ம் ஆண்டு செப். 30-ம் தேதி வீட்டிற்கு முன்பு விளையாடிய 8 வயது சிறுமிக்கு நாட்ராயன் எனும் 72 வயது முதியவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நாட்ராயனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்தது.
அதே போன்று கரூரில் கடந்த 2019ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய 3ஆம் வகுப்பு சிறுமியை, 40 வயதான சரவணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து சில மாதங்கள் ஆனா நிலையில் மீண்டும் தொடர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை சம்பவங்கள் அரங்கேறி கொண்டே வருகிறது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நடக்கும் தொடர் பாலியல் கொடுமை சம்பவம்களால் உலக அரங்கில் தமிழகத்துக்கு மிக பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி வரும் நிலையில். கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி, உத்திரபிரதேசம், குஜராத் என மற்ற மாநிலக்களில் நடக்கும் சம்பவங்கள் பற்றி கருத்து தெரிவித்து பொழுதை கடத்தாமல், தனது சொந்த தொகுதியில் நடக்கும் பாலியல் கொடுமைகளை தடுத்து நிறுத்த முயற்சி எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடதக்கது.