பிபிசி தமிழ் செய்திக்கு அளித்த பேட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திராவிடக் கட்சிகள் முன்வைக்கும் சமூக நீதியை நீங்கள் தொடர்ந்து எடுத்துச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
நான் ஒரு படி முன்னே போய் சொல்கிறேன். Dravidian Plus என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்புகிறேன். சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு அல்ல. அதைக் கொடுத்துதான் ஆக வேண்டும். அதை மறுக்க முடியாது.
ஆனால், நான் மிக முக்கியமானதாக நினைப்பது அரசியல் பிரதிநிதித்துவம். யாரோ ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டால் அது பிரதிநிதித்துவம் ஆகாது. நான் சொல்வது, கட்சித் தலைவராக, முதலமைச்சராக ஆக்க வேண்டும். இதை பா.ஜ.கவால் மட்டும்தான் செய்ய முடியும். நாளை தமிழ்நாட்டில் ஒரு எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர் முதல்வராக வருகிறார் என்றால் அதை பா.ஜ.கவால் மட்டும்தான் செய்ய முடியும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். குடும்பப் பின்னணி தேவையில்லை. உதாரணமாக, உதயநிதி ஸ்டாலினை எடுத்துக்கொள்வோம். அவர் எங்கே போட்டியிடுகிறார்? 20 ஆண்டுகளாக தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதியில்தான் அவர் போட்டியிடுகிறார். தவிர, இளைஞரணி தலைவர் என அரசியல் அதிகாரம் வேறு தரப்படுகிறது.
அப்படி பதவி கொடுத்த பிறகு கட்சியே உங்கள் பின்னால் வரும். உதயநிதி ஸ்டாலின்போல ஆயிரம் பேர் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த வாய்ப்புக் கிடைப்பதில்லையே? ஆனால், பா.ஜ.கவால் கொடுக்க முடியும் என்பதுதான் என் வாதம். ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நான் குடும்ப அரசியல் செய்து மேலே வந்தவர் என்று சொல்ல மாட்டேன். அவர் கடின உழைப்பின் மூலம் மேலே வந்தவர்.
ஆனால், அவர்கள் கட்சியில் பலர் அப்படி இருக்கிறார்கள். திருச்சியில் முதலில் தாத்தா, பிறகு மகன், பிறகு பேரன் என்று நிற்கிறார்கள். எங்கள் கட்சியில் ஒருவர் இரண்டு பேரை அப்படிச் சொல்லலாம். ஆனால், ஒரு கட்சியில் 12 – 15 இடத்தில் குறுநில மன்னர்களைப் போல ஆட்சி செய்கிறார்கள். இதனால், வேறு சில பிரிவினர் மேலே வரமுடியாமலே போகிறது. எங்களால் இதை மாற்ற முடியும் என்கிறோம். இதைத்தான் நான் Dravidian Plus என்கிறேன் என பிபிசி தமிழ் செய்திக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.