பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, அசாம், திரிபுரா, குஜராத், கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நுகர்வோருக்கு மகிழ்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
தமிழக அண்டை மாநிலமான கர்நாடகாவில் மத்திய அரசின் உற்பத்தி வரிக் குறைப்பின் எதிரொலியாக, பெட்ரோல் டீசல் இரண்டிலும் லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.அதே போன்று, கோவா மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாயும், டீசல் விலை ரூ17ம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்திலும் குறைக்க வேண்டும் என மக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக பாஜக இளைஞரணி சார்பில் தமிழக முழுவதும் நாளை 22ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தில் ஒரு டயலாக் வரும் அதில்,சிங்கத்தை போட்டோல பார்த்து இருப்ப, டிவியில பார்த்து இருப்ப, என் கூண்டில் கூட பார்த்து இருப்ப, கம்பீரமா காட்டில் நடந்து பார்த்து இருக்கியா.? வெறித்தனமா தனியா நின்னு வேட்டையாடி பாத்திருக்கியா.? ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு என சிங்கம் பட பாணியில், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா,
சிங்கங்களை படத்துல பார்த்து இருப்பீங்க, கூண்டுள பார்த்து இருப்பீங்க, மதுரை டவுன் குள்ள பார்த்திருக்கீங்களா.? 22 தேதி பார்ப்பீங்க என்று திமுகவுக்கு சவால் விடும்படி, நாளை நடைபெரும் பாஜக ஆர்ப்பாட்டம் குறித்து போஸ்டர் அடித்து மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா தலைமையிலான இளைஞரணியினர் மிரட்டி வருகின்றனர். ராஜா சிங்கம் படத்தில் வரும் சூர்யா போன்றே மீசை வைத்திருப்பது குறிப்பிடதக்கது.