தமிழகத்தில் கனடா நடிகர் ராஜ்குமார் அவரது மகன் புனித் மீது நடந்த கடுமையான தாக்குதல்..! கலவரமாக வெடித்த வரலாறு உங்களுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

தமிழகத்தில் நடந்த ஒரு சம்பவம் பின் தமிழக-கர்நாடக இடையே வெடித்த கலவரம் பற்றிய பலரும் அறிந்திராத வரலாற்று சம்பவத்தை பிரபல எழுத்தாளர் செல்வன் அன்பு தெரிவித்துள்ளதாவது, தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது 1984 மார்ச் 4 தேதி, அவரின் உருவபொம்மையை கர்நாடக ராஜ்குமார் ரசிகர் மன்றத்தினர் பெங்களூரில் கொளுத்திக்கொண்டிருந்தனர். ஊரெங்கும் கலவரம். சாரை சாரையாக கன்னட ராஜ்குமார் ரசிகர்கள் தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் வைத்த வாகனங்களை தாக்கி சேதப்படுத்திக்கொண்டிருந்தனர். அங்கமுத்து என்கிற தமிழ் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்.

தமிழக கர்நாடக எல்லையான ஓசூர் பகுதியில் பார்டருக்கு இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. கர்நாடக விநியோகஸ்தர்களிடம் தமிழ்ப்படங்கள் திரையிடப்படுவதை நிறுத்துமாறு ராஜ்குமார் ரசிகர் மன்றத்தினர் கேட்டுக்கொண்டனர். மார்ச் 22 வரை தமிழ்ப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. சித்ரதுர்கா, மாண்டியா, ஷிமோகா மாவட்டங்கள் முழு பந்த் அறிவித்தன. மார்ச் 7வரையான கலவரத்தில் 500 வாகனங்களுக்கு மேல் சேதப்படுத்தப்பட்டன. 67 பேர் காயமானார்கள்.

300பேர் வரை ராமகிருஷ்ண ஹெக்டே அரசு கைது செய்தது. சென்னையில் இதன் விளைவாக கன்னட ஓட்டல்கள் தாக்கப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? கன்னட ஹீரோ ராஜ்குமார் மற்றும் அவரது மகன் தமிழர்களால் தாக்கப்பட்டது தான். தமிழ்நாடு ஊட்டியில் ஏரிக்கரை அருகே ராஜ்குமாரின் ‘யாரிவனு'(யார் இவன்) படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தது. நாயகன் ராஜ்குமார். நாயகி ஒரு தலை ராகம் ரூபா. ஏரிக்கு அக்கரையிலிருந்து ராஜ்குமார் ஒழிக, கன்னடத்தான் ஒழிக போன்ற கோஷங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

இவர்கள் சட்டை செய்யாமல் வேலை செய்து கொண்டிருந்தனர். திடீரென முப்பது பேர் கொண்ட கும்பல் சைக்கிளில் அங்கே வந்தது. “இங்கு யார் ராஜ்குமார்?” என ஒருவர் கேட்க அவன் முன்னே ராஜ்குமார் சென்றதும் அவன் சட்டையை கொத்தாக பிடிக்க அடிதடி தொடங்கியது. செயின் போன்ற ஆயுதங்களால் தாக்கத்தொடங்கினர் வந்தவர்கள். யூனிட் ஆட்கள் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தும்முன் அடி விழுந்திருந்தது. ராஜ்குமாரின் விக்கும் காணவில்லை.

படத்தின் முக்கிய ஹீரோ ராஜ்குமாரின் மகன். அதிலும் இரட்டை வேடம். புதிய பறவை ஸ்டைல் கதை யாரிவனு. அவர் மகனுக்கும் அடி விழுந்தது. நாயகி ரூபா தொடையிலும் தோள்களிலும் கடித்து வைத்தனர். யூனிட் ஆள் ஒருவர் அடிதடியை நிறுத்தாவிட்டால் மேலிருந்து குதிப்பேன் என சிறு குன்று மீதேறி பயமுறுத்திக்கொண்டிருந்தார். வந்திருந்த ஆட்களின் தலைவன் ராஜ்குமாரின் காலில் விழுந்து அழுகிறார். கருப்புக்கொடி காட்டவே வந்தோம். கலவரமாகி விட்டது. மன்னியுங்கள் என்கிற அவர் கதறல் ராஜ்குமாரின் அதிர்ச்சியில் காதில் விழவில்லை.

அந்த தலைவரும், யூனிட் ஆட்களும் ராஜ்குமாரை பெங்களூருக்கு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இது நடந்தது மார்ச் 3. இதைத் தொடர்ந்ததான கலவரம் தான் நான்கு நாட்கள் நீடித்தது. ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா ‘இந்த ஊட்டி தாக்குதலுக்கு ஜனதா கட்சி தான் காரணம்’ என குற்றம் சாட்டினார். ‘தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் உடனே ரியாக்ட் செய்தார். மூன்று நாட்கள் வரை முதல்வர் ஹெக்டே அழைக்கவில்லை’ என குற்றம் சாட்டப்பட்டது.

தமிழர்-கன்னடர் என இருமுகம் கொண்டவர் ராஜ்குமார் என குற்றம் சொன்னார்கள் ஜனதாக்கள். ஊட்டி எஸ்.பி ரமணி ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டார். ஹெட் கான்ஸ்டபிள் நரசிம்மையா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபையில் அமளிதுமளியாக கிடந்தது சில நாட்கள். அன்று யாரிவனு படத்தில் தமிழர்களால் ஊட்டியில் தாக்கப்பட்ட சிறுவன் ராஜ்குமார் மகன் லோஹித். அந்த லோஹித்தான் நேற்று புனித் ராஜ்குமாராக மறைந்து போனார். அதே தமிழர்கள் தான் முகநூலில் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு புகழஞ்சலி செய்து கொண்டிருக்கிறார்கள்…காலம் தான் எத்தனை கோரமான முகமுடையது… – செல்வன் அன்பு