ஆரியத்திட்டத்தைத் திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள் இனியும் இருக்க மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘இல்லம் தேடிக்கல்வி’ எனும் திட்டமானது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், பொத்தாம் பொதுவாகப் பார்க்கிறபோது அது மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்கானத் திட்டம் எனக்கூறப்பட்டாலும், அது கல்வியைக் காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டத்துக்குத் துணைபோவதேயாகும்.
மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைபபதற்காகக் கொண்டு வரப்பட்டத் திட்டமெனக் காரணம் கற்பிக்கப்பட்டாலும், இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரினைத் தன்னார்வலர் எனும் போர்வைக்குள் கல்விக்கூடங்களில் நுழையவே வழிவகை செய்திடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் கல்வியை இல்லத்திற்கே கொண்டு செல்வதை நோக்கமாகக்கொண்டதென்றால், அது உழைக்கும் மக்களின் உறைவிடமாக விளங்கும் சேரிப்பகுதிகளுக்கும் செல்லுமா? என்பதற்குப் பதிலில்லை.
ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ்.ஸின் உட்பிரிவான சேவா பாரதியை கொரோனாவுக்கு எதிரான தன்னார்வலர்களின் கூட்டத்துக்காகத் தலைமைச்செயலகத்துக்கு அழைத்து அங்கீகரித்த திமுக அரசு, தற்போது தன்னார்வலர்கள் எனும் பெயரில் ஆர். எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை உள்நுழைந்திட ஏற்பாடு செய்வது வன்மையானக் கண்டனத்திற்குறியது. 5 ஆம் வகுப்பினருக்குப் பாடம் கற்பிக்க, 12 ஆம் வகுப்புப் படித்தவர்களையும், 6 முதல் 8 ஆம் வகுப்பினருக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம் என இத்திட்டத்தில் கூறப்பட்டிருப்பது பாஜகவின் புதியக்கல்விக்கொள்கையிலுள்ள ஒரு செயல்திட்டமாகும்.
புதியக் கல்விக்கொள்கையை எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு, அதன் செயல்திட்டங்களை வெவ்வேறு வடிவங்களில் அனுமதித்து, நடைமுறையில் செயல்படுத்தி வருவது மிகப்பெரும் மோசடித்தனமாகும். இக்கற்பித்தல் பணிகளில், இரு அமைச்சகத்தைக் கொண்டு, கல்வித்துறைக்கென தனி நிதிஒதுக்கீடு செய்து, பெரும் கட்டமைப்பில் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை இருக்க தன்னார்வலர்களைப் பயன்படுத்த வேண்டியதன் தேவையென்ன?
அதன்மூலம், சாதி,மத அமைப்புகள் உள்நுழைந்து, மாணவர்களின் மனதினில் நஞ்சை விதைக்கக்கூடும் என்பது அரசுக்குத் தெரியாதா? பெரியளவில் கல்வித்தகுதியோ, அனுபவமோ இல்லாத தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது எந்தவிதத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும்? மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க அரசின் நிர்வாகக்கட்டமைப்பில் ஆசிரியர் பெருமக்களே இல்லையா? அவர்கள் இருக்கும்போது, தன்னார்வலர்களை நாடுவது யார் வசதிக்காக? அது, ஆர். எஸ். எஸ்., பாஜக போன்ற மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிக்குத்தானே வழியேற்படுத்தும்?
திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி. வீரமணி அவர்களும், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஐயா முத்தரசன் அவர்களும் இத்திட்டத்தின் பேராபத்தை உணர்ந்து, எதிர்ப்புத்தெரிவித்தும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது திமுக அரசு முனைப்போடு செயல்படுத்தி வருவது பாஜகவின் வேர்பரப்பும் படுபாதக முயற்சிக்குத் துணைபோவதேயாகும். இவ்வாறு கல்வியைக் காவிக்கூடமாக்கும் ஆர். எஸ்.எஸ்.ஸின் திட்டத்தைச் செயல்படுத்திவிட்டு, அதனையே ‘திராவிடம்’ எனப் பெருமிதத்தோடு கூறி, புளங்காகிதம் அடைவது வெட்கக்கேடானது.
திராவிடமென்றால், என்னவென்று கேட்பது கோமாளித்தனமென்கிறார் ஐயா ஸ்டாலின். திராவிடம் குறித்துக் கேள்வியெழுப்புவதும், அதனைப் பகுப்பாய்வு செய்வதும் கோமாளித்தனமா? இல்லை! ‘ஆரியத்திற்கு முற்றிலும் எதிரானது திராவிடம்’ எனக்கூறிவிட்டு, ஆரியத் திட்டத்தைத் திராவிடமென அடையாளப்படுத்தலை செய்வது கோமாளித்தனமா? என்பதை நாட்டு மக்களே முடிவுசெய்து கொள்ளட்டும்! ஆனால், ‘திராவிடம்’ எனும் பெயரால் செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பிக்கொண்டு, தமிழர்கள் ஏமாளிகளாக இனியும் இருக்க மாட்டார்கள் என உறுதியோடு உரைக்கிறேன்!
அரசுப்பள்ளிகளில் உட்கட்டமைப்பையும், அடிப்படை வசதிகளையும் உருவாக்கி, அதனை மேம்படுத்தி, கற்றல் வாய்ப்புகளை பெருக்கி, அருகாமைப்பள்ளிகள் மூலமாகத்தான் மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க முடியுமே ஒழிய,’, ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் மூலமாக அல்ல. ஆகவே, பாஜக அரசின் புதியக் கல்விக்கொள்கையின் கூறுகளுள் ஒன்றான ‘இல்லம்தேடி கல்வி’ திட்டத்தைக் கைவிட்டு, மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.