10 கோடி செலவாகும் என்றால் அங்கே 50 கோடி பில் போடுவது.! எடப்பாடி பழனிசாமி மீது முக ஸ்டாலின் புகார்.!

0
Follow on Google News

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது. சாலைகள் போடுவது – போட்ட சாலைகளையே தோண்டி மறுபடி போடுவது – பாலம் கட்டுவது; தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டுவது – கட்டடம் கட்டுவது – இது ஒன்று தான் பழனிசாமி அரசில் நடக்கிறது. இதுவும் மக்கள் கோரிக்கை வைக்கும் திட்டங்களில் செயல்படுத்தப்படவில்லை.

இதில் மட்டும் தான் பணம் அடிக்க முடியும் என்பதற்காக 10 கோடி செலவாகும் என்றால் அங்கே 50 கோடி பில் போடுவது. 50 கோடி செலவாகும் என்றால் 300 கோடி போடுவது – இது தான் பழனிசாமி ஆட்சி கொள்ளை அடிக்கும் பாதையாக உள்ளது. பொதுப்பணித்துறை – உள்ளாட்சித் துறை ஆகிய இரண்டுக்கு மட்டும் பணத்தை ஒதுக்கி பங்கு வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் பழனிசாமியும் வேலுமணியும், அ.தி.மு.க. அமைச்சர்களும்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் பொதுப்பிரச்னையையும் தீர்க்கவில்லை. பொதுமக்களின் பிரச்சனையையும் தீர்க்கவில்லை! தங்கள் கையில் கிடைத்த அதிகாரத்தை பத்தாண்டு காலமாக பாழாக்கிவிட்டார்கள். மொத்தத்தில் பொதுமக்களுக்கு அச்சம் தருகின்ற அரசாக அ.தி.மு.க. அரசு மாறிவிட்டது. இந்த அச்சத்தை போக்கும் அரசாக தி.மு.க. அரசு அமையும். மக்களின் அச்சத்தை போக்கும் அரசாக மட்டுமல்ல – வளர்ச்சியில் உச்சத்தை தொடும் அரசாக தி.மு.க. அரசு அமையும்.

மு.க.ஸ்டாலினாகிய நான் உங்கள் பிரச்னைகளை 100 நாட்களில் தீர்ப்பேன் என்று சொன்னால், தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையால் தான் சொல்கிறேன். ஒரு அரசாங்கம் மனது வைத்தால், ஒரு தனிமனிதனின் பிரச்னையை நிச்சயம் தீர்க்க முடியும். ஒரு தனிமனிதனின் பிரச்னைக்காக, ஒரு மணி நேரம் ஒதுக்கி அப்பிரச்னையை பற்றி சிந்தித்தாலே போதும், அதற்கான உரிய பரிகாரத்தை நிச்சயம் காண முடியும் என முக ஸ்டாலின் தெரிவித்தார்.