தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது என்றால் உயிரிழப்பு அதிகரிப்பது ஏன்.?முதல்வருக்கு ஓபிஎஸ் செக்.!

0
Follow on Google News

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் இறங்குமுகமாக இருக்கிறது என்பதும், குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும் ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கொரோனா நோய்த் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்றும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 100 நபர்களில் குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழக்கிறார் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பத்து நாட்களாக இந்த நிலை மேலும் அதிகரித்து காரணப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை 460-க்கு குறையாமல் இருந்து வருகிறது. 25-5-2021 அன்று 34,285 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், உயிரிழப்பு 468 என்று இருந்தது. அதாவது பாதிக்கப்பட்டோரில் 1.366 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விழுக்காடு படிப்படியாக அதிகரித்து, 4-6-2021 அன்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோரில் 2 சதவிகிதத்தினர் உயிரிழந்துள்ளனர். அதாவது, 22,651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னை மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தைச் சார்ந்த 253 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, உயிரிழந்தோர்களில் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இந்த இரண்டு மண்டலங்களைச் சார்ந்தவர்கள்.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, பாதிப்போரின் எண்ணிக்கையும், குணமடைவோரின் எண்ணிக்கையும் குறைந்து வரும் சூழ்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு நீக்கப்பட்டு, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், உயிரிழப்புகள் அதிகமாவதற்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.