நான் உதயநிதி பிஏ.. என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது..! பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது..

0
Follow on Google News

திருப்பத்தூர் மாவட்டம் செல்வாத்தூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகாராஜன். இவரது மகள் தேன்மொழி. பட்டதாரியான இவர் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இவர் திருமணத்துக்கு முன்பு சென்னையில் வேலை செய்த போது ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தேன்மொழியை தொடர்புக்கொண்ட ராஜேஷ் தான் திமுக இளைஞரணியில் இருப்பதாகவும் தலைமைச் செயலகத்தில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது என தெரிவித்தவர்.

எனது செல்வாக்கை பயன்படுத்தி, அந்த வேலையில் உன்னை சேர்த்து விடுகிறேன். என்ன கொஞ்சம் பணம்தான் செல்வாகும் எனக் கூறியுள்ளார். ராஜேஷின் பேச்சை நம்பிய தேன்மொழி சுமார் 4.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். வருடங்கள் ஓடியும் வேலைக்கான ஆர்டர் வந்தபாடில்லை. இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ராஜேஷை தொடர்புக்கொண்ட அந்த பெண் வேலை வாங்கி கொடுங்கள் உங்களால் முடியவில்லை என்றால் என்னிடம் வாங்கிய பணத்தையாவது திருப்பி கொடுங்கள் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ராஜேஷ், “ திமுக ஆட்சி வந்துவிட்டது. கொஞ்சம் நாள் வெயிட் பண்ணு. நிச்சயமா வேலை வாங்கித்தரேன். இப்பக்கூட  உதயநிதி அண்ணாகிட்ட தான் வேலை விஷயமா பேசிக்கிட்டு இருந்தேன் தெரிவித்தவர், மேலும் அதோடு நில்லாமல் இன்னும் ஒன்று இரண்டு காலிப்பணியிடம் இருக்கிறது. அதையும் நிரப்பனும் உனக்கு தெரிஞ்சவங்க இருந்தா சொல்லு எல்லாருக்கும் ஒண்ணா வேலைக்கான ஆர்டர் வாங்கித் தர்றேன் என தெரிவித்துள்ளார் ராஜேஷ்.

இவரின் பேச்சை நம்பி தனக்கு தெரிந்த சில நபர்களிடம் ராஜேஷை அறிமுகம் செய்து வைக்க. அவர்களிடமும் பல லட்சங்களை சுருட்டியுள்ளார். நாள்கள் செல்லச் செல்ல வேலைக் கிடைக்காததால் தேன்மொழியின் வீட்டுக்கு சென்று பணம் கொடுத்தவர்கள் நச்சரித்துள்ளனர். மீண்டும் ராஜேஷை தொடர்புக்கொண்ட தேன்மொழி பணத்தை திருப்பி தரும்படி கேட்க அதற்கு, ராஜேஷ் மிரட்டல் தோணியில் பேசியுள்ளார்.

நான் உதயநிதியின் பி.ஏ.இப்ப நடக்கிறது எங்க ஆட்சி. உன்னால் என்ன ஒன்னும் பண்ண முடியாது எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்துக்கு சென்று அந்தப்பெண் இதுகுறித்து புகார் அளித்தார். இதனையடுத்து தேன்மொழியிடம் ராஜேஷின் செல்போன் எண்ணை பெற்று விசாரணைக்கு வருமாறு போலீஸார் கூறியுள்ளார். அப்போது நான் உதயநிதியின் பி.ஏ. யாராக இருந்தாலும் தலைமைச் செயலகம் வந்து பார்க்கச் சொல்லுங்கள் என திமிராக பேசியுள்ளார்.

இதற்கிடையில் தேன்மொழிக்கு மீண்டும் ராஜேஷ் போன் செய்து மிரட்டும் ஆடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில்உன்னால என்ன ஒண்ணும் பண்ண முடியாது. என் கட்சி செல்வாக்கு வெச்சு இந்த மேட்டர நான் பார்த்துக்கிறேன். யாருக்கும் ஒரு ரூபாய் கொடுக்க முடியாது. உனக்கு தான் ஆபத்து நீ எங்கயாவது போய் மறைஞ்சுக்கோ எனக் ராஜேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த ராஜேஷை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எந்த கட்சியிலும் எந்த பொறுப்பிலும் இல்லை உதயநிதியின் பி.ஏ-வும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பண மோசடி செய்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியை சேர்ந்தவர் எனக் கூறியது தெரியவந்துள்ளது.மோசடி, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.