ஹைதராபாத் : ஹைதராபாத் சரூர் நகர் பஞ்சால அனில்குமார் காலனியில் இரவு 8.45க்கு இருசக்கரவாகனத்தில் தங்களது வீட்டில் இருந்து கிளம்பிய புதுமணத்தம்பதிகள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அதில் மணமகன் முகம் கம்பியால் அடித்து சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடக்கையில் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டும் மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்தது மக்களின் மனிதாபிமானத்தின் எல்லையை வெளிக்காட்டுவதாக அமைந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டவர் பெயர் நாகராஜ் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் நாகராஜ் மற்றும் சுல்தானா ஆகிய இருவரும் பள்ளி மற்றும் கல்லூரி ஒன்றாக பயின்றுள்ளனர். அதில் ஏற்பட்ட நட்பு காதலாகி இருவரும் குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்துள்ளனர். நாகராஜ் கார் விற்பனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகராஜை சுல்தானா குடும்பத்தினர் மதம் மாற வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதை மறுத்த நாகராஜை சுல்தானா குடும்பத்தினர் கொடூரமாக கொலை செய்தனர். சுல்தானா ஹிந்துவாக மாறி தனது பெயரை பல்லவி என மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுல்தானாவின் சகோதரர்கள் செய்யது மொபின் அஹம்மது மற்றும் முகம்மது மசூத் அஹம்மது ஆகிய இருவரையும் சரூர் நகர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா கூட்டத்தில் பேசிய AIMIM கட்சியின் நிறுவனர் அசாதுதீன் ஒவைஸி “சரூரில் நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த பெண் விரும்பி திருமணம் செய்திருக்கிறார். அவரை கொல்ல சகோதரருக்கு உரிமையில்லை. இது கிரிமினல் குற்றம். அரசியலமைப்பு மற்றும் இஸ்லாத்தின்படி மிக மோசமான குற்றம். இந்த சம்பவத்திற்கு வேறு நிறம் பூசப்படுகிறது. நாங்கள் கொலையாளிகளுடன் நிற்கவில்லை” என தெரிவித்தார்.
இந்த படுகொலையை நேரில் கண்ட நாகராஜின் மனைவி சுல்தானா என்கிற பல்லவி செய்தியாளர்களிடம் கூறுகையில் ” நாங்கள் இருசக்கர வாகனத்தில் வரும்போது எனது சகோதரர்கள் வழிமறித்து தாக்கினார்கள். எனது கணவரை தாக்கும்போது நான் தடுத்தேன். என்னை கீழே தள்ளிவிட்டார்கள். எனது கணவரை தாக்கும்போது சுற்றி மக்கள் இருந்தும் யாரும் தடுக்க முன்வரவில்லை. எனது கணவரின் முகத்திலேயே 20 முதல் 40 தடவை கம்பியால் தாக்கினார்கள்” என அழுதுகொண்டே கூறினார்.