எனக்கு காபி கொடுத்து, “அப்பா எப்படி இருக்காங்க” என்றெல்லாம் விசாரிப்பார்.! ஜெயலலிதா நட்பு குறித்து மனம் திறந்த ஸ்டாலின்.!

0
Follow on Google News

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், எதிர்க்கட்சியாக ஜெயலலிதா மீது விமர்சனம் இருக்கும். ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது? எது என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முக ஸ்டாலின், அவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் தைரியமாக தப்போ, சரியோ முரட்டுத்தனமாக ஒரு முடிவு எடுப்பதிலும், சரியான முடிவு எடுப்பார்கள். பா.ஜ.க.வால் தான் தோற்றேன் என்று பட்டவர்த்தனமாக சொன்னார்கள்.

கடைசி வரைக்கும் உயிரே போனாலும் பா.ஜ.க.வோடு சேர மாட்டேன். என்று போல்டாக சொன்னார்கள். அது மாதிரி யாராலும் சொல்ல முடியாது. உள்ளபடியே அது பாராட்டக் கூடிய ஒன்றுதான். நான் ஒரு முறை – சுனாமி ஏற்பட்ட போது அதற்கு நிதியாக, தலைவர் அவர்கள் தான் கதை வசனம் எழுதிய படத்தின் மூலம் வந்த ரூ. 25 லட்சத்தை அதை அப்படியே கொடுத்து விட்டு வா என்று சொன்னார்! அப்போது அந்த அம்மையாரிடம் நேரம் வாங்கிக் கொண்டு கோட்டையில் போய் நேரடியாக சந்தித்தேன்.

என்னை உட்கார வைத்து காபி கொடுத்து, “அப்பா எப்படி இருக்காங்க” என்றெல்லாம் விசாரித்தார்கள். தலைவர் படத்திலே ‘எங்கள் தங்கம்’ என்ற படத்திலே நடித்திருக்கிறார். அதனால் அவர் எதிரியெல்லாம் கிடையாது. அரசியல் ரீதியாக எதிரியாக இருக்கலாமே தவிர நட்பு ரீதியாக எப்போதும் உண்டு என தெரிவித்தார், தொடர்ந்து ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முக ஸ்டாலின்.

இறந்தவர், ஒரு சாதாரண ரோட்டில் போகிற குப்பனோ, சுப்பனோ அல்ல. இந்த நாட்டினுடைய முதலமைச்சர். என்னதான் எங்களுக்கு எதிர்க்கட்சியாக கொள்கை ரீதியாக ஒரு எதிரியாக இருந்தாலும் கூட எங்களுக்கும் சேர்த்து அவர்தான் முதலமைச்சர். 1.1 சதவிகிதம் ஓட்டு அதிகம் வாங்கினார். அதனால் அவர் முதலமைச்சர். நாங்கள் 1.1 சதவிகிதம் குறைவாக வாங்கியிருந்தோம். அதனால் நாங்கள் எதிர்க்கட்சி. இருந்தாலும் எங்களுக்கும் அவர்தான் முதலமைச்சர். எங்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே முதலமைச்சர்.

அவருடைய மரணத்திலே மர்மம் இருக்கிறது என்று நாங்கள் சொல்லவில்லை. சொன்னது, இன்றைக்கு இருக்கக் கூடிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதை சொன்னது நாங்கள் அல்ல. அவர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உண்மையை கண்டுபிடித்து, இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டியது எங்களது கடமை என தெரிவித்தார்.