இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும்… மருத்துவர் ராமதாஸ் பக்ரீத் வாழ்த்து..

0
Follow on Google News

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது. மனிதநேயத்தை வலியுறுத்தும் திருநாளான பக்ரித் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகும்.

இக்கடமையின் ஓர் அங்கமாக ஹஜ் மாதம் 10&ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி, அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கான நடைமுறைகளில் பல பாடங்கள் அடங்கியுள்ளன. பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும்.

இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. இறைபக்தியையும் கடந்து இந்தத் திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்; அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதாகும்.

அதற்காகத் தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரித் வலியுறுத்துகிறது. இது அற்புதமான பாடமாகும். இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். அதன்படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன்.