இன்று அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் அதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் அனைத்திலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். பெண்கள் அர்ச்சகர் பயிற்சி எடுக்க விரும்பினால், அவர்களுக்கும் பயிற்சி அளித்து அர்ச்சகராக்குவதற்கு உண்டான முயற்சியை முதல்வர் அனுமதியுடன் மேற்கொள்வோம். 100 நாட்களில் தமிழக கோவில்களில் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் பணி செய்வார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து திரைப்பட இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார் அதில், ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000, முன்னாள் முதல்வர் ஜெ அவர்களின் மரணம் பற்றிய விசாரனை இப்படி இன்னும் பல வாக்குறுதி கொடுத்தீர்கள். இதையெல்லாம் இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்க மாட்டோம். ஏனென்றால் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் உயிரை காப்பாற்றுவதுதான் தற்போது தலையாய கடமை. அதை அரசு செவ்வனே செய்து வருகிறது.
ஆனால் இந்துமத விவகாரங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அவசரம்? ஆட்சிக்கு வந்த ஒருவாரத்தில்
ஈஷா மையத்தை சீண்டியது, தமிழில் அர்ச்சனை! அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்!
அர்ச்சகராக பெண்கள்! மற்ற எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் இந்த அவசரத்தை காட்டிருந்தால் இந்தக் கேள்வி எழுந்திருக்காது. இந்துக் கோயிலின் நடைமுறை விஷயங்களில் மாற்றம் கொண்டுவருவதில் மட்டும் அவசரம் காட்டுவதால்தான் எங்களுக்கு ஐயம்.
தமிழில் அர்ச்சனை வரவேற்கிறோம்! கோயிலுக்குள் அர்ச்சகராக பெண்களை அனுப்புவது முற்போக்கு சிந்தனைதான். அதே முற்போக்கு சிந்தனையை பிறமத ஆலயங்களிலும் முயற்சிக்கலாம்! ஒருதலை பட்சமான சட்டம் முற்போக்கு ஆகாது. மதசார்பற்ற அரசு என்றால் அனைத்து மதக்கோவில்களிலும் சட்டத்தை சமமாக வையுங்கள். எல்லோரையும் சமமாக பார்க்கும் பார்வையைத்தான் எதிர்பார்க்கிறோம்! என பேரரசு தெரிவித்துள்ளார்.