மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டமான, 100நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு பெறப்பட்ட ஆர்டிஐ தகவலில் தமிழகத்தில் மட்டும் மிக பெரிய நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ .245 கோடி நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில்,
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாட்டில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாத அவலமும் நடைபெற்றுள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார் அறிக்கையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்தில் ₹246.13 கோடிக்கு, ஊழல் நடந்துள்ளது. மாநில அரசு, இதில் ₹1.85 கோடியை மீட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் இதன் மீது கவனம் செலுத்தி, தப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா?
100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடந்ததாக இந்த துறையின் அமைச்சர் திரு. பெரிய கருப்பன் அவர்கள் சொல்லி மூன்று மாதங்கள் ஆகி விட்டது. நடவடிக்கை எடுப்பதில் காட்டப்படும் மெத்தனப் போக்கு ஆளும் திமுக அரசுக்கும் இதில் சம்பந்தம் உள்ளது போன்ற தோற்றத்தையே தருகிறது. 2017-18 to 2020-21 ஆண்டுகளுக்கான ஊழல் அது! லஞ்சம், வேலை செய்யாத ஆட்களுக்கு சம்பளம், அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கியது போன்றவை முக்கியக் காரணங்கள்!
ஆந்திராவில் இதைப் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 180 ஊழியர்களை பணி நீக்கம் மற்றும் 551 ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளார்கள்! தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கப் போவது எப்போது? அதேபோல் 37 மாவட்டங்களிலும் குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமனம் செய்யப் போவது எப்போது? இந்தியாவிலேயே நாம் மட்டும் தான் இதுபோல் இருக்கின்றோம்! என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம பஞ்சாயத்துக்களில் அதிகபட்சமாக ரூ .245 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக , 527 தணிக்கை அறிக்கைகள் பதிவேற்றப்பட்டன. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஆனால், அவர்கள்மீது ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.
ஆந்திராவில் 12,982 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன, மேலும் 31,795 சமூக தணிக்கைகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் பதிவேற்றப்பட்டன. மொத்தமாக முறைகேடான நிதி 239.31 கோடி ரூபாய்; மீட்பு ரூ 4.48 கோடி (1.88%). 14.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் 10,454 ஊழியர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. மொத்தம் 551 பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு 180 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடதக்கது.