கொரோனா தொற்று காரணமாக மரண எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மதுரை தத்தனேரி மின் மயானத்தில் சடலங்கள் குவிந்து வருகிறது, இதுகுறித்து தன் கண்முன்னே மனதை வருடிய நிகழ்வு குறித்து பகிர்ந்து கொண்டார் சமூக ஆர்வலர் விஸ்வநாத், அவர் தெரிவித்ததாவது, காலை 6 மணிக்கு ஒவ்வொன்றாக வரத்தொடங்கிய அரசு இலவச அமரர் ஊர்தி, வரிசையாய் கொரோனா அவசர சிகிச்சை வளாக வார்ட் முன் நின்றன. அலைபேசியில் 04428888180 அல்லது 155377 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச்செல்ல பதிய சொன்னார்கள்.
பின் ஒவ்வொரு வாகனகத்திலும் வரிசையாய் ஒவ்வொன்றாக பிணங்கள் ஏற்றப்பட்டன, கூடியிருந்த சொந்தங்களின் அழுகை ஒலியில் அன்றைய விடியல் சூரிய ஒளியில். இறந்தவரின் அடையாளம் அவரின் முகம் அல்ல, முழுவதும் போர்த்தப்பட்ட துணியில் எழுதப்பட்ட அவர்களின் பெயர், வயது மற்றும் த/பெ.
தத்தனேரி மின் மயானத்தை சில நிமிடங்களில் அடைந்தாலும், மயான வளாகத்தின் வாயிலில் வரிசைகட்டி நிற்கும் அமரர் ஊர்தியில் பிணங்களின் ஊர்வலம்.
ஒவ்வொன்றாக இறக்கி மின் எரியூட்டு வளாகத்தின் முகப்பு அரையில் வரிசை படுத்தப்பட்டன. பின் ஒவ்வொரு சடலத்திற்கும் ஒரு டோக்கன். இப்படி தொடர்ந்து சடலங்கள் ஊர்தியில் வந்திறங்கிய வண்ணமாய் மன்னிக்கவும் வண்ணங்களற்ற தருணமாய் அந்த காட்சி. மயானத்தை சுற்றிலும் அழுது ஒப்பாரி பாடிய உறவினர்கள். என் தெய்வமே என்ன விட்டு போய்ட்டியேடா என் குல சாமி என்கிட்ட திரும்ப வந்துருடா
நீ இல்லாம நா எப்படி இருப்பேன் அம்மா, வா மா…
ஒவ்வொரு சடலங்களும் மயானத்தில் பதிவு செய்யப்பட்டதற்கு பின்பு இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின் “சடலத்தை குடும்பத்தினரின் பார்வைக்கு பாதுகாப்பான இடைவெளியில் வைக்கப்படுகிறது, பின் உடல் முழுதும் கிருமி நாசினி தெளிப்பட்டு, மூடப்பட்டிருக்கும் முகம் மட்டும் திறந்து வைக்கப்படுகிறது, அவரவர் சம்பரதாயப்படி இறுதி காரியங்கள் சில மணித்துளிகள் அனுமதிப்படுகின்றது. பின் விடைபெறுகிறது நம்மைவிட்டு. பின் எறிந்த எலும்புகளை (அஸ்தியை) ஒரு மண் பானைக்குள் அடைத்து உறவினர்கள் கையில் வழங்கி வழியனுப்பி வைக்கிறார்கள் மயான சொந்தங்கள்.
அமரர் ஊர்தியின் பின்னால் ஒரு குடும்பம் மொத்தமும் சூழ்ந்து அழத்தொடங்கினர். பின்னால் உள்ள கண்ணாடியின் வழியே ஒரு வயதான பாடி உள்ளே உள்ள சடலத்தை காண எக்கி எக்கி முயற்சித்துக் கொண்டிருந்தார். சுதாரித்த அமரர் ஊர்தி ஓட்டுநர், அவர்களை நோக்கி ஒரு கேள்வி எழுப்பினார். இறந்தவங்க பேர் என்ன? சரவணன்! இது கோவிந்த சாமி, உங்க பாடி இன்னும் வரல. கொஞ்சம் தள்ளி நில்லுங்க வண்டி எடுக்கணும்…. பிணக்குவியல்களில் எங்கே தேடுவேன் என் பிணத்தை என தத்தனேரி மின் மயானத்தில் குவியும் சடலங்கள் பற்றி எடுத்துரைத்தார்.