கொரோனா தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த கிராம மக்கள்.! என்ன செய்தார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

நகரங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் போதிய சுகாதார கட்டமைப்புகள் இல்லாததால், அங்கு கொவிட்-19 பரவலை தடுப்பது சிக்கலான விஷயம். ஆனால், மகாராஷ்டிராவின் நந்தெட் மாவட்டம் போகர் தாலுகாவில் உள்ள போசி என்ற கிராமம், தனிமைப்படுத்துதல் முறையை பின்பற்றி, கொவிட் பாதிப்பை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இங்கு 2 மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவுக்குப்பின், ஒரு சிறுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அடுத்த வாரத்தில் 5 பேருக்கு தொற்று பரவியது. இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில், ஜில்லா பரிஷத் உறுப்பினர் பிரகாஷ் தேஷ்முக் என்பவர், கிராம பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்புடன், போசி கிராமத்தில் கொவிட் பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்தார். இதில் 119 பேருக்கு தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது. இவர்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மிதமான கொவிட் பாதிப்பு ஏற்பட்ட அனைவரும், அவர்களது வயல்களில் 15 முதல் 17 நாட்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இவர்களுக்கு தேவையான உதவிகளை அங்கன்வாடி பணியாளர் ஒருவர், தினந்தோறும் வயலுக்கு சென்று உதவினார். இவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன. அனைவரும் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். சுமார் 15 முதல் 20 நாட்களுக்குப்பிறகு, பரிசோதனைக்குப்பின் இவர்கள் தொற்று பாதிப்பு அற்றவர்களாக தங்கள் கிராமத்துக்கு திரும்பினர். கடந்த ஒன்றரை மாதமாக, இந்த கிராமத்தில் ஒருவருக்கும் கொவிட் தொற்று ஏற்படவில்லை என இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.

தனிமைப் படுத்துதல் முறையை பின்பற்றினால், போதிய சுகாதார வசதிகள் இல்லையென்றாலும், கொவிட் பாதிப்பில் இருந்து மீள முடியும் என்பதற்கு இந்த கிராமம் வழிகாட்டுகிறது. கொவிட் பாதிப்பிலிருந்து, கிராமத்தினரை பாதுகாக்கும் ஒரே வழி தனிமைப்படுத்துதல் தான்’’ என்கிறார் இந்த கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி பாய்.