நெல்லை சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள வகுப்புகளில் சுமார் 2 ஆயிரத்து 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை பகல் 11 மணி அளவில் மாணவர்களுக்கு 10 நிமிட இடைவேளையில் சில மாணவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளனர். மற்றொரு கழிவறை கட்டிடம் முன்பு சில மாணவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போதுது திடீரென்று அந்த கழிவறை சுவர் இடிந்து விழுந்தது.
இதில் அங்கு நின்ற மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் வெளியிட்டுள்ளார் அறிக்கையில், திருநெல்வேலி மாநகராட்சி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து சதீஷ் (6ம் வகுப்பு), வில்வரஞ்சன்(8ம் வகுப்பு), அன்பழகன்(9ம் வகுப்பு) ஆகிய 3 மாணவர்கள் மரணம் எய்தி இருக்கிறார்கள்; அப்துல்லா (7ம் வகுப்பு), சஞ்சய்(8ம் வகுப்பு), இசக்கி பிரகாஷ் (9ம் வகுப்பு), சேக் அபுபக்கர் (12ம் வகுப்பு) ஆகிய 4 பேர் காயமடைந்து இருக்கிறார்கள் என்ற செய்திகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இறந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்தது குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு அரசு உரிய முறையில் துணை நிற்கவும், காயமுற்ற மாணவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்துகிறேன்.
இது போன்ற சூழல் எதிர்வரும் காலங்களில் நிகழ்ந்திராத வண்ணம் பொதுப்பணித் துறையின் மூலமாக அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களையும், கழிப்பறைகளையும் ஆய்வு செய்து, அவற்றை புனரமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அரசு உதவி பெறும் கிறிஸ்தவ கல்வி நிறுவனமாகிய சாப்டர் மேல்நிலைப்பள்ளி கிறிஸ்தவ திருச்சபையில் மூலம் நடத்தப்படுகிறது.
கிறிஸ்தவ டையோசிஸ் சபைகளுக்குள் நிலவும் உட்பூசல்களால் கல்வி நிர்வாகத்தை முறையாக மேற்கொள்ளவில்லை. எனவே இந்த கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பள்ளிக்கல்வித்துறை இது விஷயத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.