சென்னை மந்தைவெளியில் தேங்கி இருக்கும் மழை நீரில் நடந்து சென்ற முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். சென்னையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் கனமழை பெய்து வந்த நிலையில் நீர்நிலைகள் நிரம்பி சென்னையே வெள்ளக்காடாக உள்ளது. நேற்று முன்தினம் முதல் மழை ஓரளவு குறைந்ததால் வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னை மந்தைவெளி மாநகர் பேருந்து டிப்போ அருகே உள்ள சாலைகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி இருந்தது. அவ்வழியாக பொதுமக்கள் கடந்து சென்ற நிலையில் இன்று காலை 10 மணி அளவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மந்தவெளி மாநகர் பேருந்து டிப்போ வழியாக நடந்து செல்லும்போது அதிர்ச்சியாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் அவரது கை பட்டுள்ளது.
இதனையெடுத்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது சம்பவ இடத்திலேயே அந்த 60வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்துள்ளார். அந்த வழியாக நடந்து சென்ற சிலர் இந்த சம்பத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரம் பாய்ந்து மயங்கிய நிலையில் இருந்த அந்த முதியவரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை செய்ய முயற்சித்தபோது தான் அவர் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் மழை நீர் தேங்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது ஆனால் மழை நீர் தேங்கிய இந்த மந்தைவெளி டிப்போ அருகே மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்திருப்பதால் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இந்த சம்பவம் மந்தைவெளி பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.