இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு என்று பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு வீரரை ரசிகராகக் கொண்டிருப்பார். அந்த வகையில் பார்க்கப்போனால், இன்றைய ஜாம்பவான்களான சச்சின், தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களிடம், ‘உங்கள் பிடித்த வீரரின் மறக்க முடியாத ஆட்டம் எது’ எனக் கேட்டால், அவர்கள் ஒவ்வொருவரும் பல ஆட்டங்களை நினைவுகூறுவர்.
தவிர, அவர்கள் பேட் செய்த யூடியூப் வீடியோக்களும், அதிக அளவில் பார்வையைப் பெறவில்லை. ஆனால், தினேஷ் கார்த்திக்கின் ரசிகர்களிடம், இதே கேள்வியைக் கேட்டால், அவர்கள் அனைவரும் சட்டென்று சொல்வது 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இறுதிப்போட்டியைத்தான். மேலும் அந்தப் போட்டியின் வீடியோதான் யூடியூப்பின் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது.
2018ஆம் ஆண்டு, மார்ச் 18ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற நிதாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக அவர் கடைசி இரண்டு ஓவர்களில் ஆடிய ஆட்டத்தின் வீடியோவே யூடியூப்பில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அந்தப் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 19ஆவது ஓவரில் 22 ரன்கள் குவித்தார்.
பின்னர் கடைசி ஓவரில், 12 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் நான்கு பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. ஐந்தாவது பந்தில் விஜய் சங்கர் ஆட்டம் இழந்தார். கடைசிப் பந்தை தினேஷ் கார்த்திக் சந்தித்தார். அந்த பந்தில் சிக்ஸ் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில், சவுமியா சர்க்காரின் கடைசி பந்தை ஆஃப் சைடில் சிகஸ்ருக்குத் தூக்கி இந்திய அணியின் வெற்றியைத் தித்திப்பாய் முடித்துவைத்தார்.
இந்த கடைசி ஓவர் மட்டும் தனி வீடியோவாக இலங்கை கிரிக்கெட் அமைப்பால் யூடியூப்பால் வெளியிட்டது. இந்த வீடியோதான் இன்றும் ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 243 மில்லியன் பார்வைகள் (24.3 கோடி) பெற்றுள்ள இந்த வீடியோ, 1.8 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும், இன்றுவரை YouTube-இல் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற ஒரே கிரிக்கெட் வீடியோ இதுவாகும்.
சமூக வலைதளத்தில் இப்படியொரு சரித்திர சாதனைக்குச் சொந்தக்கரராக இருக்கும் தினேஷ் கார்த்திக், நடப்பு ஐபிஎல் தொடருடன் அந்தப் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய அணியில் கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
அதன்படி தன்னுடைய தனது 19வது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடந்த ஒரு நாள் போட்டியில் தேசிய அளவில் அறிமுகமானார். அதேபோல் ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அதன்படி ஆர்சிபி அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்து அந்த அணி ரசிகர்களை கவர்ந்தார்.
தினேஷ் கார்த்திக் 94 ஒருநாள் போட்டிகளில் 1,792 ரன்கள் மற்றும் ஒன்பது அரைசதம் அடித்துள்ளார். டெஸ்டில், கார்த்திக் 42 இன்னிங்ஸ்களில் வங்கதேசத்திற்கு எதிரான சதம் உட்பட 1,025 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 60 ஆட்டங்களில் 686 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் 2006/07 மற்றும் 2020-21 இல் இரண்டு முறை கேப்டனாக சையத் முஷ்டாக் அலி டிராபி, டி20 போட்டியை வென்றார். ஐபிஎல்லில் 257 போட்டிகளில் விளையாடி 26.32 சராசரியில் 4,842 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பல சாதனை செய்து கிரிக்கெட் போட்டியில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்து இருக்கும் நிலையில் அவரை கொண்டாடி பிரியா விடை கொடுக்க தவறிவிட்டது இந்திய கிரிக்கெட் போர்ட் என்கின்றனர் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள்.