2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அதிரடி காட்டியது. இந்த முறை ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அந்த அணி படுமோசமாக தோல்வி அடைந்தது அந்த அணி வீரர்களையும், உரிமையாளர் காவியா மாறனையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த சீசன் முழுவதும் மிரட்டலாக விளையாடி வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்றைய போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த சீசன் முழுவதும் பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் அதிரடி காட்டிக் கொண்டிருந்த ஹைதராபாத் அணி முதல் கட்ட ஆட்டத்தில் 260 ரன்களை குவித்து ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் படுமோசமாக விளையாடி வந்தது. ஹைதராபாத் அணி தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அந்த அணியின் உரிமையாளர் காவியா மாறன் சோகமாக முகத்தை வைத்துக் கொள்வார். காவ்யா மாறனின் சோகமான முகம் அடிக்கடி ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும்.
சமீபத்தில் கூட, ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத் அணியை இன்னும் பலமாக மாற்றுங்கள், காவியா மாறனை சோகமாக பார்ப்பது சங்கடமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகளில் காவியா மாறன் கொடுக்கும் ரியாக்ஷன் பலரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
இப்படியான நிலையில், காவியா மாறன் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸை நியமித்து அணியில் பல்வேறு மாற்றங்களை செய்தார். பேட் கம்மின்ஸ் கேப்டனாக வந்ததிலிருந்து ஹைதராபாத் அணி புது உற்சாகத்துடன் விளையாட தொடங்கியது. பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஆல் ரவுண்டர்கள் என அணியில் இருந்த வீரர்களை அவர் சரியாக வழி நடத்திச் சென்றார்.
இதன் காரணமாக ஹைதராபாத் அணி இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடியது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து புது ரெக்கார்டை உருவாக்கியது. இதனாலேயே அந்த அணியின் உரிமையாளர் காவியா மாறன் இந்த சீசன் முழுவதும் சிரித்த முகத்துடன் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடினார். லீக் போட்டிகளில் ஹைதராபாத் அணி வென்றதற்கு காவியா மாறன் இவ்வளவு சந்தோஷப்படுகிறார் என்றால் சாம்பியன் பட்டத்தை வென்றால் எந்த அளவிற்கு குஷியாக இருப்பார் என்பதை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
ஆனால், கடைசியில் யாரும் எதிர் பார்க்காத டிவிஸ்டை கொடுத்தது கொல்கத்தா அணி. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 18.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதை அடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவரிலேயே 114 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
இத்தகைய தோல்வியை சற்றும் எதிர்பார்க்காத காவ்யா மாறன், கொல்கத்தா அணி வெற்றி பெற்றதும் எழுந்து நின்று கை தட்டினார். அதே சமயம், ஏமாற்றம் தாங்க முடியாமல் கண்கள் கலங்கவே முகத்தை திருப்பிக் கொண்டு கண்ணீரைத் துடைத்தார். உடனடியாக அருகே இருந்த அவரது தாய் அவரை சமாதானப்படுத்தி ஆறுதல் கூறியிருக்கிறார். அதன் பிறகு, எமோஷனை கட்டுப்படுத்திய காவியா மாறன் மீண்டும் திரும்பி கைதட்டி கொல்கத்தா அணி வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். காவ்யா மாறன் கண்கலங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.