இந்தியாவில் தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை அணியையும் அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியாவையும் பற்றிய கருத்துக்கள் அதிக அளவில் விவாதம் செய்யப்பட்டு வருகிறது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணிக்கு ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து மாஸ் காட்டினார் ஹர்திக் பாண்டியா.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை அந்த அணி நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து விலக்கியது. மேலும் அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை அழைத்து வந்து மும்பை அணியின் கேப்டனாக நியமித்தது. மும்பை அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு ஆரம்பம் முதலே மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மும்பை அணி நிர்வாகம் எதற்கும் செவிமடுக்கவில்லை.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசனும் தொடங்கியது. மும்பை அணி ஆடிய முதல் மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியையே சந்தித்தது. இதற்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சி தான் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான முழக்கங்களை கோஷமிட்டு வந்தனர்.
அதே சமயம் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகவும் கூச்சலிட்டு வந்தனர். இவ்வாறு ரசிகர்கள் மும்பை அணி ஆடும் போட்டிகளில் எல்லாம் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவர் என்ன செய்வதென்று தெரியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் கிரிக்கெட் மேட்ச்யிலும் சரிவர கவனம் செலுத்த முடியாமல் அடுத்தடுத்த ஆட்டத்தில் கோட்டை விடுகிறார்.
பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் அசத்தலாக ஆடும் திறமை உடைய ஹர்திக் பாண்டியா நடப்பு சீசனில் தனது திறமையை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறார். குறிப்பாக, நேற்று நடந்து முடிந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கூட பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே சொதப்பி விட்டார். மேலும் இப்போதெல்லாம் பெரும்பாலான போட்டிகளில் அவர் பந்து வீசுவதே இல்லை. சொல்லப்போனால் ஹர்திக் பாண்டியா இப்போது பார்ம் அவுட்டில் இருப்பது போல தெரிகிறது.
இந்நிலையில், அடுத்த ஜூன் மாதம் t20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியில் இடம்பெற வேண்டும் எனில் அவர் மீண்டும் ஃபார்முக்கு வரவேண்டும். இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் ஹர்திக் பாண்டியாவிடம் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால், அதிக அளவில் பந்து வீச வேண்டும் என்றும், மீண்டும் ஃபார்முக்கு வரவேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்று இந்திய டி20 அணிக்கு கேப்டனாக வருவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஃபார்ம் அவுட் ஆகி இந்திய அணிக்குள் இடம்பெறுவதே மிகப்பெரிய சவால் ஆகிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.