மைதானம் – பந்து இரண்டிலும் குளறுபடி… சிஎஸ்கே தோல்விக்கு இது தான் காரணம்…

0
Follow on Google News

ஒரு மைதானத்தின் தன்மையை ஒரு கேப்டனும், பந்துவீச்சாளர்களும் விரைவாக உணர்ந்துகொண்டாலே எதிரணியை எளிதாகக் கட்டுப்படுத்திவிட முடியும், ரன் குவிப்பை தடுத்து, வெற்றியை எளிதாக்க முடியும். எந்த அளவுக்கு விக்கெட்டின் தன்மைக்கு ஏற்ப தங்களின் பந்துவீச்சை மாற்றி அமைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு வெற்றியின் கடினம் தீர்மானிக்கப்படும்.

அந்த உத்தியை சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸும், பந்துவீச்சாளர்களும் சரியாக கணித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறைபிடித்தனர். ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில், ரச்சின் ரவீந்திரா – ருத்துராஜ் கெய்க்வாட் இன்னிங்சை தொடங்கினர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த ரவீந்திரா 9 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே ருத்துராஜூடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மந்தமாக உயர்ந்தது.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். குறிப்பாக தொடக்கம் முதலே சிக்சர்களாக விளாசிய அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மார்க்ரம் ஹெட்டுன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இறுதியில் 18.1 ஓவர்களில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. க்ளாசன் 10 ரன்களுடனும், நித்தீஷ் ரெட்டி 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் மொயின் அலி 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார், தீக்ஷனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் விழ்த்தினர். இதன் மூலம் சென்னை அணி தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

தோல்வியடைந்த சென்னை அணியை பொறுத்தவரையில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், அனுபவமின்மையால் நிறைய தவறுகளை செய்து போட்டியை தங்கள் பக்கம் கொண்டுவர தவறவிட்டார். ஸ்லோ பிட்ச் ஆடுகளம் என்பதால் ஷிவம் துபே போன்ற ஹார்ட் ஹிட்டிங் பேட்ஸ்மேன்களால் ரன்களை எடுத்துவர முடிந்தது. அந்தவகையில் ரவிந்திர ஜடேஜாவுக்கு முன்னதாக மொயின் அலியை களமிறக்கியிருக்க வேண்டும்,

அவரை தொடர்ந்து நல்ல டச்சில் இருக்கும் ஹார்ட் ஹிட்டிங் பேட்டரான தோனியை பேட்டிங்கிற்கு எடுத்து வந்திருக்க வேண்டும். அப்படி எடுத்துவந்திருந்தால் சென்னை அணியால் கூடுதலாக 20 ரன்களை அடித்திருக்க முடியும் ஆடுகளத்தின் தன்மையையும், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு விளையாடுவார்கள், எந்தப் பந்துவீச்சில் பலவீனம், யாருக்கு எவ்வாறு பந்து வீசலாம் என்பதை கேப்டன் கம்மின்ஸ் நன்கு படித்து “ஹோம்ஓர்க்” செய்து வந்திருந்தார்.

அதனால்தான், ஒவ்வொரு பேட்ஸ் மேன்களுக்கு ஏற்றாற்போல், ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி பந்துவீசி எந்த பேட்டர்களை களத்தில் நங்கூரமிடவிடாமல் துரத்திக்கொண்டே இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஆடுகளத்தின் தன்மையை விரைவாக உணர்ந்து கொண்ட கம்மின்ஸ், சக பந்துவீச்சாளர்களுக்கும் எவ்வாறு பந்துவீச வேண்டும், எந்த மாதிரியான பந்துகளை அதிகம் வீச வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி சிஎஸ்கே பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் சித்தரவதை செய்தார். அந்த விதத்தில் மைதானம் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் கணிக்க முடியாமல் கோட்டை விட்ட சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.