என்னய்யா கேப்டன் நீயெல்லாம்… இப்படியே போச்சுன்னா மும்பை அணிக்கு சங்கு தான்…ஹர்திக் பாண்டியாவை வறுத்து எடுத்த யூசப் பதன்…

0
Follow on Google News

தற்பொழுது நடந்து வரும் 17 வது சீசன் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல் சிஎஸ்கே அணி டேபிள் டாப்பில் இருந்தாலும், வழக்கத்திற்கு மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த போட்டியில் தோல்வியை சந்தித்து வருகிறது.

முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக களம் இறங்கிய போதிலும், அடுத்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக களம் இறங்கிய போதிலும் மும்பை அணி அடுத்தடுத்து படு தோல்வியை சந்தித்துள்ளது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. அதே சமயம், மும்பை அணி ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

கேப்டன்சி சரியில்லாததால் தான் மும்பை அணி திணறி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை விளாசி வரும் நிலையில், மற்றொரு பக்கம் கிரிக்கெட் வீரர்களும் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து தங்களது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் எட்டாவது லீக் போட்டியில் மோதிக்கொண்டன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஹைதராபாத் அணி சார்பில் ஹென்றிச் க்ளாசன் 80 ரன்களும், அபிஷேக் சர்மா 63 ரன்களும், டிராவிஸ் ஹெட் 62 ரன்களும் குவித்திருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பும்ரா மட்டும் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.

இந்த போட்டியில் இரண்டாவது ஓவரில் பந்து வீசிய ஹர்திக் பாண்டியா, பவர் பிளேவில் ஒரே ஒரு ஓவரை மட்டும் பம்ராவுக்கு கொடுத்திருந்தார். அதன் பிறகு பத்து ஓவர் தாண்டியும் பும்ராவிற்கு ஓவர் கொடுக்கவில்லை. இதனால் ஹைதராபாத் அணியினர் தங்களால் எவ்வளவு ரண்களை குவிக்க முடியுமோ அவ்வளவு ரன்களை எடுத்தனர்.இறுதியாக மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை குவித்த ஹைதராபாத் அணி, மும்பை அணிக்கு 278 என்ற இமாலய இலக்கை விட்டு சென்றது.

அதை எடுத்து களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 246 ரண்களை மட்டுமே எடுத்தது. சுமார் 31 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதுகுறித்து கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெளியிட்டிருந்த ட்வீட்டில், “ஹைதராபாத் அணி 11 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் உங்கள் அணியின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா ஒரு ஓவர் மட்டுமே வீசி இருக்கிறார்.

நிச்சயமாக இது எனக்கு நல்ல கேப்டன்சியாக தெரியவில்லை. ஹர்திக் பாண்டியா மோசமாக கேப்டன்சி செய்கிறார்” என்று வெளிப்படையாக யூசுப் பதான் தெரிவித்துள்ளார். அதேபோல் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி, “பும்ரா எங்கே? போட்டி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் இதுவரை உங்கள் அணியின் சிறந்த பந்துவீச்சாளர் ஒரே ஒரு ஓவர் மட்டும்தான் பந்து வீசி இருக்கிறார்.” என் ஹர்திக் பாண்டியா மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, எங்கள் அணியில் பவுலர்கள் அனுபவம் இல்லாததால் நடந்த தவறு என தெரிவித்துள்ளார். ஆனால் இது உண்மையிலேயே அனுபவம் இன்மையாக நடந்த தவறு இல்லை, ஹர்திக் பாண்டியாவின் முட்டாள் தனத்தினால் மற்றும், ஆணவ திமிருனாள் நடந்த தோல்வி, என இப்படி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களுமே ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து கடுமையாக விமர்சித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.