ஜூன் இரண்டாம் தேதி தொடங்கிய 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அமைந்துள்ள மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த உலக கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டிதான்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐசிசி t20 உலக கோப்பை இந்த ஆண்டு அமெரிக்காவால் நடத்தப்படுகிறது. இம்முறை உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஒன்பது மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
அந்த ஒன்பது மைதானங்களில் ஒன்றுதான் நியூயார்க்கில் உள்ள நாசாவு கவுண்டி மைதானம். இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்காகவே அமெரிக்கா இந்த மைதானத்தை செயற்கையாக உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த மைதானம் கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக காயங்களை ஏற்படுத்தும் வகையில் மோசமான நிலையில் உள்ளது.
இந்த மைதானத்தின் பிட்ச் சரியாக அமைக்கப்படாததால், பந்து பவுன்ஸ் ஆகும் திசையை கிரிக்கெட் வீரர்களால் யூகிக்க முடியவில்லை. தாறுமாறாக பவுன்ஸ் ஆகி வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. ஆகவே இந்த மைதானம் மிகவும் மோசமாக இருப்பதாக முன்னால் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கையில் பலத்த அடி ஏற்பட்டது. அயர்லாந்து அணிக்கு எதிரான அன்றைய போட்டியில் அரை சதம் அடித்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருக்கையில்,;பந்து எதிர்பாராத விதமாக அவரது கையில் படுவேகத்தில் வந்து தாக்கியது.
அதுவரை ஆர்வமாக விளையாடிய அரை சதம் அடித்து கலக்கிக் கொண்டிருந்த கேப்டன் ரோகித், காயம் ஏற்பட்ட பிறகு கை வலி தாங்க முடியாமல் அந்த போட்டியில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். இந்த சம்பவம் இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இருப்பினும் அன்றைய போட்டியில் இந்தியா அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகமடைய செய்தாலும், ரோகித் சர்மா காயத்தில் இருந்து
மீண்டு விட்டாரா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எழுந்தன. இந்நிலையில், நியூயார்க்கில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள 19ஆவது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இரு நாடுகளின் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் நாளைய போட்டியை காண காத்திருக்கின்றனர்.
தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ரோகித் சர்மாவுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டிருக்கிறது எனவும், நாளை நடைபெற உள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயமாக முழு உடல் தகுதியுடன் அவர் விளையாடுவார் எனவும் இந்திய கிரிக்கெட் அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே நாளை நடைபெறும் போட்டியில் நிச்சயமாக கேப்டன் ரோஹித் சர்மாவை எதிர்பார்க்கலாம் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான செய்தியாகும்.