வருகின்ற ஜூன் மாதம் t20 உலக கோப்பை தொடர் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வு குழு கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலையும் பேக்கப் வீரர்களின் பட்டியலையும் அறிவித்திருந்தது.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சிவம் துபே, யஷஷ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் 11 பேர் கொண்ட பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ்கான் ஆகியோர் பேக்கப் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிசிசிஐ தேர்வு குழுவால் வெளியிடப்பட்ட இந்த பட்டியல் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. அனைத்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடி அதிரடி காட்டி வந்த ரிங்கு சிங் 11 பேர் கொண்ட முக்கிய வீரர்களின் பட்டியலில் இடம் பிடிப்பார் என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால் அவரது பெயர் பேக்கப் வீரர்களின் பட்டியலில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதே சமயம் சமீப காலமாக ஐபிஎல் போட்டிகளில் தனது மிரட்டலான பந்துவீச்சால் எதிரணியினரை கலங்கடித்துக் கொண்டிருக்கும் நடராஜனுக்கும் டி20 உலக கோப்பை தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
தமிழக வீரர் என்பதற்காகவே நடராஜனை பிசிசிஐ தேர்வு குழு புறக்கணிக்கிறது என்று பலர் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் சில ரசிகர்கள் நடராஜனுக்கு கண்டிப்பாக இந்த முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். ஏற்கனவே தமிழக வீரர் நடராஜனுக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் குரல் கொடுத்திருந்தனர்.
தற்பொழுது பிசிசிஐ தேர்வு குழுவால் வெளியிடப்பட்டால் இந்திய அணி வீரர்களின் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சோசியல் மீடியா முழுவதும் இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், மூத்த கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்வு குழுவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உண்மையில், பிசிசிஐ தேர்வு குழுவால் t20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலில் மாற்றம் செய்ய முடியுமா? தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? ஐசிசி விதி என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதாவது ஐசிசி கிரிக்கெட் விதியின்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் மே 25 வரை தாராளமாக செய்யலாம்.
அதன் பிறகு செய்ய வேண்டும் என்றால் வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். தற்பொழுது கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல தரப்பினரும் சுப்மன் கில்லுக்கு பதிலாக ருத்ராஜையும், கலீல் அகமது இடத்தில் நடராஜனையும் தேர்வு செய்யுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே ரசிகர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மே 25ஆம் தேதிக்குள் பி சி சி தேர்வு குழு மாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.