படுமோசமான ஏ ஆர் ரகுமான் கான்செர்ட்….. கடுப்பில் டிக்கெட் வாங்கியவர்கள்….

0
Follow on Google News

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளனர். அவர் படங்களை தாண்டி, தனது இசைக் கச்சேரிகளை உலகமெங்கும் நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று தீரும் அளவுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடப்பார்கள். அப்படியான நிலையில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார்.

அதன்படி ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசைக் கச்சேரி நடைபெற இருந்தது. இதற்கான டிக்கெட்டுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. ரசிகர்களும் ஆவலுடன் ஆகஸ்ட் 12 அன்று நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வர தொடங்கினர். இதனால் பனையூர் விழாக்கோலம் பூண்டிருந்தது.

நிகழ்ச்சிக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென வானிலை மாறி மழை கொட்ட தொடங்கியது. இதனால் விழா நடைபெறும் மைதானத்தில் மழைநீர் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகமாகினர். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்து சோகத்துடன் பதிவிட்ட ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து, “மோசமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக இசை நிகழ்ச்சி வேறொரு தேதிக்கு மாற்றப்படுகிறது எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி . புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவின் இசை கச்சேரி நேற்று நடைபெற்றது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்ற நிகழ்ச்சியால் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தவர்கள் பனையூர் நோக்கிப் படையெடுத்தனர்.

இந்நிலையில் இசை நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பல ரசிகர்கள், தங்களது கடும் அதிருப்தியைக் கொட்டித் தீர்த்தனர். ஞாயிறு மாலை வீட்டை விட்டு கிளம்பிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மேலும் இசைக்கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். ஆனால், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாகவும், நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாகவும் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

மேலும் இதில் பணம் கொடுத்தும் பல ரசிகர்களால் கச்சேரி நடைபெறும் இடத்திற்குள் போக முடியவில்லை என்று கூறி உயிர் பிழைத்தால் போதும் என்று சொல்லி வீடு திரும்பினர். அதுமட்டுமின்றி டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்றவர்களாலேயும் இசை நிகழ்ச்சியை பார்க்கமுடியாத அளவிற்கு இருந்தது. தண்ணீர் கிடைக்கவில்லை.

கழிவறை வசதி இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்தனர். மேலும் இருக்கைகளை திட்டமிட்டபடி ஒதுக்கீடு செய்யவில்லை எனவும் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து நிகழ்ச்சிக்கு வந்தும் முறையாக கண்டுகளிக்க முடியவில்லை எனவும் குமுறினர். அதுமட்டுமின்றி இசை நிகழ்ச்சியில் சவுண்ட் சரியாக கேட்கவில்லையாம். சவுண்ட் சிஸ்டம் சரியில்லை என்றும் ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மறக்குமா நெஞ்சம் என்று எந்த நேரத்தில் பெயர் வைத்தாரோ ஏஆர் ரகுமான், அவரது ரசிகர்களால் மறக்கவே முடியாத நிகழ்வாகி விட்டது.