நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகியுள்ளார். தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு பிறகு மிகப்பெரிய மார்க்கெட்டை வைத்திருந்த நடிகராக இருந்தவர் விஜயகாந்த். ஆனால் தேமுதிக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்ததும் சினிமாவில் நடிப்பதைப் படிப்படியாக குறைத்துக்கொண்டார்.
2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக ஆனதில் இருந்து அவர் சினிமாவில் நடிப்பதே இல்லை.
இதற்கிடையில் அவரின் கட்சியின் வீழ்ச்சி மற்றும் கடுமையான உடல்நலப் பாதிப்பு ஆகிய காரணங்களால் கடந்த சில வருடங்களாக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். கட்சி பணிகள் கூட அவரின் மனைவி மற்றும் எல் கே சுதீஷ் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டது.
இப்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் பரவிவருகிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார் ஆகியோர் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் அவர் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். இது விஜயகாந்தின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.