விஜய்யின் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படம் இன்னும் ஓரிரு வாரங்களில் திரையில் வெளியாக இருக்கின்றது. எனவே இதற்கான ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
போஸ்டர்ஸ், பாடல்கள், ட்ரைலர் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு அறிவிப்புகளை கொடுத்து வரும் லியோ படக்குழு படத்தின் மீதான ஹைப்பையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. அதன் காரணமாக இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் இறுதியில் சென்னையில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கான வேலைகளிலும் படக்குழு தீவிரமாக இறங்கியது. ஆனால் டிக்கெட் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது படக்குழு. இதன் காரணமாக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகினர். இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருந்து வந்த நிலையில் விழா ரத்தானது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
என்னதான் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்றாலும் லியோ படக்குழு அடுத்தடுத்து அப்டேட் விட்டு ரசிகர்களை உற்சாகமாக்கி வருகின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. எப்போதும் பெரிய நடிகர்களின் டிரைலர் வெளியானால் அது ரோகிணி திரையரங்கத்தின்பார்க்கிங் ஸ்கிரீன் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும். அந்த வகையில் லியோ பட ட்ரைலரை திரையிட இருப்பதால் திரையரங்கின் வாகனங்களை நிறுத்துமிடத்தில் காட்சியளிக்க கோயம்பேடு உதவி ஆணையரிடம் அனுமதி கூறியிருந்தனர்.
வேண்டுமென்றால் சென்னை காவல் ஆணையம் அலுவலகத்தில் இதனை கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து போலீசார் அனுமதி பெற்று ட்ரைலர் திரையிடப்பட்டது. இப்படி ஒரு நிலையில் ட்ரைலர் திரையிட்ட பின்னர் விஜய் ரசிகர்கள் பலர் திரையரங்கின் இருக்கைகளை அடித்து நொறுக்கி உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
விஜய் ரசிகர்களால் ரோகிணி தியேட்டரில் இருக்கைகள் சேதுமடைந்ததற்கு போலீஸின் தவறான கையாளுதலை காரணமென்று உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கட்டுப்பாடுகளுடன் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்கலாம் என்று உயர்நீதிமன்றம் கூறியது. மேலும், லியோ பட டிரைலர் வெளியீட்டின் போது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதை நீதிபதி ஜெயசந்திரன் சுட்டிக்காட்டினார்.திரையரங்கை விஜய் ரசிகர்கள் சேதப்படுத்தியதற்கு காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம் என்று அவர் கூறினர். ரசிகர்களை, காவல்துறையினர் முறையாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட குழப்பத்தையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த புகார் மனுவில், “ லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்க வேண்டும். நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும். டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் ‘லியோ’ படத்தின் புரமோஷன் விழா பிரமாண்டமாக நடத்தப்படும் என தயாரிப்பாளர்கள் லலித் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த விழா துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.