மாநாடு படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்றது தொடர்பாக சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது. ஆனால் ரிலீஸ் தேதிக்கு முதல் நாள் அந்த படத்தின் தொலைக்காட்சி உரிமை விற்காததால் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்தது. அப்போது சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் ஐந்து கோடி ரூபாய்க்கான உத்தரவாத பத்திரத்தில் பைனான்சியருக்குக் கையெழுத்து போட்டுக்கொடுத்தார்.
அதன்பின்னரே சொன்ன தேதியில் காலை 8 மணிக் காட்சி முதல் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து படம் 8 கோடி ரூபாய்க்கு விஜய் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது. டி ராஜேந்தரின் உத்தரவாத பத்திரத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.
ஆனால் இப்போது படத்தின் ரிலீஸுக்காக உதவிய தன்னுடைய ஒப்புதல் இல்லாமலேயே படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்றுவிட்டதாக டி ராஜேந்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது சம்மந்தமாக சென்னை நீதிமன்றம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்ஷியர் உத்தம் சந்த் ஆகியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.