இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2021ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 28 மொழிகளில் வெளியான 280 படங்கள் இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
69-வது தேசிய விருதை ஒட்டுமொத்தமாக தெலுங்கு மற்றும் இந்தி படங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இதில் இரண்டு தமிழ் படங்களுக்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது. அதில் சிறந்த நடிகைக்கான விருதை முறையே ‘கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் ‘மிமி’ படத்திற்காக ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் பகிர்ந்து கொண்டனர். ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
பி.லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை காஷ்மீர் பைல்ஸ் வென்றுள்ளது. ஷெர்ஷா’ திரைப்படம் சிறப்பு ஜூரி விருதை வென்றது. மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
அப்படம் சிறந்த தமிழ்படம் ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘கொமுரம் பீமுடோ’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை கால பைரவா வென்றார். நடிகர் மாதவன் இயக்கி, நடித்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஆர். பார்த்திபன் இயக்கி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘இரவின் நிழல்’ படத்தின் பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
‘மாயவா தூயவா… ’ என்ற பாடலுக்கு ஸ்ரேஷா கோஷல் சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றுள்ளார். அதேபோல் கருவறை என்ற ஆவணப்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் சினிமாவிற்கு பெரிதளவு விருதுகள் கிடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனுஷின் கர்ணன், சூர்யாவின் ஜெய்பீம், பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களுக்கு விருது கிடைக்கும் என ரசிகர்கள் மற்றும் திரை துறையினர்கள் நம்பினார்கள்.
ஆனால் தமிழ் சினிமாவுக்கு குறைந்த அளவு விருதுகளே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 10 விருது கிடைத்திருந்தது. இங்கு திறமைக்கு மதிப்பு இல்லை எல்லாம் பாலிடிக்ஸ் தான் என பலரும் குமுறுகிறார்கள். ஜெய்பீம் மணிகண்டன், சூர்யா, கர்ணன் தனுஷ், சார்பட்டா பரம்பரை ஆர்யாவை விடவா புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் சிறப்பாக நடித்துவிட்டார் என தமிழ் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வேண்டும் என்றே தமிழ் சினிமாவை புறக்கணித்துவிட்டார்கள். அது ஏன் என்பது எங்களுக்கு தெரியும். இது நியாயமே இல்லை என்று தமிழ் சினிமா ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் அல்ல மலையாள சினிமா ரசிகர்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள். நாயாட்டு படத்தில் சிறப்பாக நடித்த ஜோஜு ஜார்ஜை விடவா அல்லு அர்ஜுன் நடித்துவிட்டார் என்று குமுறுகிறார்கள்.
இது தவிர்த்து கன்னட ரசிகர்களும் கடுப்பில் தான் இருக்கிறார்கள். எங்கள் டாக்டர் ராஜ்குமாருக்கு கிடைக்காத விருது அல்லு அர்ஜுனுக்கா, இதை ஏற்க முடியாது என்கிறார்கள். அந்த வகையில் வடிவேலு காமெடி காட்சிகளில் ஒன்றான நாச்சியப்பன் பத்திர கடை காமெடியை பகிர்ந்து தேசிய விருந்து அறிவிக்கப்பட்டதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவதை பார்க்க முடிகிறது.