மத்திய பாஜக அரசின் ஒன்பதாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாற்காக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். இந்த வருகையின் போது. கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித்ஷா, சினிமா, விளையாட்டு, அரசியல், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 24 முக்கியஸ்தர்களை சந்தித்து இரவு விருந்து அளித்தார்.
இந்த இரவு விருந்தில் சினிமா துறையை சார்ந்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார், இயக்குநர், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமநாதன், தயாரிப்பாளரும் வேல்ஸ் பல்கலைக்கழக உரிமையாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் ஏஆர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இந்நிலையில் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போது, அதற்கு முன்பாக, அரசியல் சாராத பிரபலங்களை பிரதமர் மோடி சந்திப்பார். கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நடிகர் விஜய், ரஜினி உட்பட முக்கிய பிரபலங்களை சந்தித்தார் மோடி, அதே போன்று பிற மாநிலத்தில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்தவர் பிரதமர் மோடி.
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என்பதையெல்லாம்விட, சமூக பிரச்சனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்த ஜி வி பிரகாஷ், ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் உள்பட பல விஷயங்களில் நேரடியாகக் களமிறங்கிப் போராடியவர். இந்த நிலையில் அவர் தற்பொழுது அமித்சாவை சந்தித்து அவருடன் இரவு விருந்தில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தது போன்று, அவரை பின்பற்றி இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ்ம் பாஜகவில் இணைகிறார் என்கிற விவாதமும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அமித்ஷா ஜி வி பிரகாஷ் இருவரும் சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்ததில் பல தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக அரசு 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில். தற்போது இந்தியா முழுவதும் 9 ஆண்டு சாதனை விளக்க நிகழ்வுகளை பாஜக தரப்பில் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்குள்ள முக்கிய பிரபலங்களை நேரில் அழைத்து, பாஜக அரசின் நிறை குறைகளை கேட்டு அறிவதற்கான ஒரு சந்திப்பு தான் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் உட்பட பல திரை பிரபலங்களை சந்தித்து அமித்ஷா பேசியது என கூறப்படுகிறது.
அந்த வகையில் அமித்ஷா உடனான சந்திப்பின் போது, பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளார் ஜி வி பிரகாஷ், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் , பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் ஒலிக்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழும் ஒழிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பை முதலில் சரி செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சந்திப்பானது ஜிவி பிரகாஷ் பாஜகவில் இணைவதற்கான சந்திப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நீங்கள் டெல்லி வந்தால் என்னுடைய வீட்டிற்கு வாங்க என அமித்ஷா ஜிவி பிரகாஷிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசிய நிலையில் எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், நடிகை குஷ்பூ போன்று ஜி வி பிரகாஷும் பாஜகவில் இணையலாம் என்கிற பேச்சும் பரவலாக உலா வருவது குறிப்பிடதக்கது.