சமீபத்தில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள RRR திரைப்படத்தின் நிகழ்ச்சி ஓன்று சென்னையில் நடந்தது, இந்த நிகழ்ச்சியின் இசை, நடனம் என நிகழ்வுகள் அரங்கேறியது, அப்போது ஒரு நிகழ்வின் போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அனைவருக்கு நன்றி சொல்ல அந்த நிகழ்வில் ட்ரம் வாசித்த இசை கலைஞருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.
உடனே மேடையின் கீழே இருந்த சிவகார்த்திகேயன் செய்கையால் ட்ரம் வசித்தவருக்கு நன்றி சொல்ல தொகுப்பாளருக்கு வலியுறுத்தினார். உடனே தொகுப்பாளர் ட்ரம் வசித்தவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சிவகார்த்திகேயனுக்கு பாராட்டை பெற்று தந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது.
இந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது புதிய தலைமுறையில் ஆரம்ப கால கட்டத்தில் நடந்த ஒரு சம்பவம். நேரலையில் எதையோ சரியாக சொல்லாததற்காக டைரக்டர் டாக்பேக்கை அழுத்தி “இதெல்லாம் வந்து நம்ம உயிர எடுக்குது, த்தூ” என எனக்கு கேட்கும்படியாக சொன்னார். எனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருந்தது.
செய்தி வாசிக்கும்போது அவர் டைரக்டராக உட்கார்ந்தாலே எனக்கு பதற்றமாகிவிடும், அமைதியான மனநிலையே இருக்காது. அதனை கடக்க சில நாட்கள் தேவைப்பட்டது. இந்த காட்சிக்கு வருவோம், இப்போதுவரை தமிழில் ஆகச் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் யார் என்றால் சிவகார்த்திகேயன் என்று சொல்லுவேன்.
இப்போது எவ்வளவு பெரிய நடிகர் ஆனதற்குப்பிறகும் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் மேடையில் ட்ரம்ஸ் வாசித்தவருக்கு நன்றி சொல்லவில்லை என்பதை எவ்வளவு அழகாக நினைவுபடுத்திச் சொல்லிக் கொடுக்கிறார் பாருங்கள். அதனை அவர் கோபமாகவோ, எரிச்சலாகவோ, இதக்கூட சொல்லத்தெரியல என்ற டோனிலோ சொல்லவில்லை.
என் போன்றவர்களுக்குத்தான் இதிலுள்ள கனிவு புரியும். நமக்கு சில நேரங்களில் அவ்வளவுதான் வேண்டும், யாரும் 100% சரியாக எதையும் செய்ய முடியாது. தவறாகவோ அல்லது புதிதாக ஒன்றை செய்பவர்களை பதற்றப்படுத்துவதால் என்ன ஆகிவிடப்போகிறது. மற்றவர்களை ஊக்கப்படுத்துவோம், நிச்சயம் நாம் குறைந்துவிடமாட்டோம் என பனிமலர் தெரிவித்துள்ளார்.