இஸ்ரோவின் கனவு திட்டமாக இருப்பது சந்திரயான். இந்த திட்டத்திற்காக கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் சந்திரயான் 3 விண்கலத்தை ராக்கெட் மூலம் ஏவியது. இந்த சந்திரயான் 3 பூமியின் புவியீர்ப்பு விசையில் பூமியை சுற்றி வந்து மெல்ல மெல்ல பூமியிலிருந்து விலகி நிலவின் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு தற்போது நிலவை சுற்றி வருகிறது.
நிலவில் சுமார் 135 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது இதன் புரொபல்ஷன் மாடுலில் இருந்து இதன் லேண்டர் தனியாக பிரிந்தது. கடந்த 20ஆம் தேதி அப்டேடடின் படி இந்த லேண்டர் நிலவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் உயரத்தில் தான் சுற்றி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் எந்நேரம் வேண்டுமானாலும் நிலவில் தரையிறங்கலாம். தற்போது இஸ்ரோ நிலவில் தரையிறங்கும் பகுதியில் சூரிய வெளிச்சம் ஏற்படுவதற்காக காத்திருக்கிறது இஸ்ரோ.
பொதுவாக நிலவில் ஒரு துருவத்தில் 14 நாட்களும் மற்றொரு துருவத்தில் 14 நாட்களும் வெயில் இருக்கும் அதனால் தற்போது நிலவில் தென்துருவப் பகுதியில் வெயில் இல்லை. அங்கு இருள் சூழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு வெயில் வரத் துவங்கிவிடும். இதன்படி கணக்கிட்டால் விக்ரம் லேண்டர் சரியாக இந்திய நேரப்படி வரும் 23ஆம் தேதி மாலை 06:04 மணிக்கு நிலவில் தரையிறங்கி விடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இஸ்ரோ திட்டமிட்டபடியே அனைத்து பணிகளும் சரியாக நடந்து கொண்டே இருக்கிறது.
இதுவரை அமெரிக்கா,சீனா,ரஷ்யா ஆகிய நாடுகள் தான் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக இந்த தரையிறங்குதல் மூலம் இந்தியாவும் மிகப்பெரிய சாதனையை படைத்து விண்வெளி உலகில் புதிய மைல்கல்லை எட்டிப் பிடிக்க உள்ளது.
இந்த மூன்று நாடுகளும் நிலவில் தரை இறங்கியிருந்தாலும் பெரும்பாலும் இது வடதுருவத்தை மையமாக வைத்து தரையிறங்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவது என்பது சவாலான விஷயமாக இருக்கிறது. ஆனால் அங்கு தான் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. ஏற்கனவே சந்திரயான் 2 இதற்கான முயற்சியில் ஈடுபட்டு அது பெரிய வெற்றியை ஏற்படுத்தி தரவில்லை.
இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலம் சந்திரயான் 2 மூலம் இஸ்ரோ கற்றுக்கொண்ட பாடத்தை வைத்து உருவாக்கப்பட்ட விண்கலமாக இருப்பதால் இது வெற்றிகரமாக தரையிறங்கும் என உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தரையிறங்க உகந்த இடத்தை தேர்வு செய்வதற்காக லேண்டர் நிலவை புகைப்படம் எடுத்து வருகிறது. அவ்வாறு கடந்த 19 ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
இதனை ட்ரோல் செய்யும் விதமாக நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் டீ ஆத்துவதுபோல் ஒருபடத்தை வெளியிட்டு, விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து எடுத்த முதல் படம் என்று பதிவு செய்துள்ளார். இதனால் பலர் காண்டாகி விட்டனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பாஜக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியின் செயல்பாட்டை அவர் கடுமையாக சாடி வருகிறது.
அதோடு இந்துத்துவா அமைப்பினரையும், அவர்களின் கொள்கைகளையும் பொது மேடைகளில் தாக்கி பேசி வருகிறார். இதுவரை ஒரு அரசியல் கட்சியை விமர்சனம் செய்துவந்த அவருடைய அரசியல் கருத்து. ஆனால் சந்திரயான்-3 ஒட்டுமொத்த இந்தியாவிற்கான பெருமை. அரசியல் நோக்கத்தில் அவமரியாதை செய்யக்கூடாது. டிரோல் செய்யும்போது அரசியலுக்கும், நாட்டிற்கும் இடையிலான எல்லையை தெரிந்து கொள்ளுங்கள் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.