முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய விழா கோலாகலமாக குஜராத்தில் இருக்கும் ஜாம்நகரில் நடைபெற்றது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட்டின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் இருந்து நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தார்கள்.
சினிமா நடிகர்கள் மட்டுமின்றி தொழிலதிபர்களும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் முக்கிய பிரமுகர்களும் வெளிநாட்டு பாடகர்களும் இந்த நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்து இருந்தார்கள். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் ப்ரீ வெட்டிங் விழாவில் ஒரு நிகழ்வாக நடிகர்கள் பலரும் ஆடல் பாடல் என அனைவரையும் கோலாகலப்படுத்தியிருந்தார்கள்.
இரண்டாம் நாள் கொண்டாட்டத்தின் போது ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் மூவரும் இணைந்து ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடினார்கள். அப்போது அந்த பாடலில் ஒரிஜினலாக ஆடிய நடிகர் ராம் சரணை, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மேடைக்கு அழைத்தார். “இட்லி, வடை, சாம்பார்’ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? உடனே மேடைக்கு வரவும்” என குரல் கொடுத்தார்.
பின்னர் நால்வரும் இணைந்து ஹூக் டான்ஸ் ஃபர்பார்ம் செய்தனர். நடிகர் ஷாருக்கான், ராம் சரணை இட்லி, வடை, சாம்பார்இப்படி அழைத்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபசனாவின் ஒப்பனைக் கலைஞரான ஜெப ஹாசன் இந்த சம்பவம் குறித்து தன்னுடைய மனவருத்தத்தை தெரிவித்து கொண்டார்.
“நான் நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகன். இருப்பினும் அவர் ராம் சரணை மேடையில் வைத்து இட்லி வடை சாம்பார் என் அழைத்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. அவர் செய்தது ஒரு அவமரியாதையான செயல். அதனால் நான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டேன்” என தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்து இருந்தார் ஜெப ஹாசன்.
தென்னிந்தியர்களை குறிப்பாக இட்லி, சாம்பார் என வட இந்தியர்கள் அழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஷாருக்கானும் அதே போல இட்லி, வடை ராம் சரண் என அழைத்து மேடையில் ஏற்றி நடனமாட வைத்தார். ஷாருக்கான் ராம் சரணை அப்படி அழைத்தது தவறு என சோஷியல் மீடியாவில் ராம் சரண் ரசிகர்கள் ஷாருக்கானை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
ஒரு பிரபல நடிகரை இப்படித் தான் மேடையில் அவமதிப்பதா என தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ஷாருக்கானை விளாசி வருகிறார்கள். தென்னிந்திய நடிகர்கள், நடிகைகளை குறைவாக நினைக்க வேண்டாம். பாலிவுட்காரர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் இல்லை என விமர்சித்துள்ளனர்.
பலரும் ஷாருக்கானுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வரும் அதே வேளையில், ஷாருக்கான் அழைத்ததும் ராம்சரண் மேடையேறி சந்தோசமாக மூன்று கான்களுக்கு நடுவே நாட்டுக்கூத்து பாடலுக்கு நடனம் ஆடினார். அப்போதுதான் அவரது நடனத்தைப் பார்த்து ஷாருக்கான் தலைவணங்கி செய்த செய்கையை யாரும் கவனிக்கலையா, அவர்கள் நட்பு ரீதியாக கலாய்த்துக் கொள்வது எல்லாம் சர்ச்சையாக வேண்டாம் என ஷாருக்கான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.