சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். பத்து தல படம் பார்ப்பதற்கான டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தமிழக அளவில் வைரலானது. இதனால் ரோகினி திரையரங்குக்கு எதிராக கடும் கண்டன குரல் வலுத்தது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘பத்து தல’ படம் யு\ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு திரை துறையை சேர்ந்த பலரும் கண்டங்களை பதிவு செய்து வருகிறார்கள், இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய கண்டன பதிவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது’ என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய பார்வர்ட் ப்ளோக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி தன்னுடைய கண்டன பதிவில், சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த உறவுகளை திரையரங்குக்குள் அனுமதிக்காதது மனிதாபிமானம் அற்ற செயல் சக மனிதர்களை மதிக்கத் தெரியாத இந்த திரையரங்கு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த திரை அரங்கை இழுத்து மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.