பணத்தை வாங்கி ஏ.ஆர்.ரகுமான் எங்களை ஏமாற்றி விட்டார்.. ஏ ஆர் ரகுமான் மீது பரபரப்பு புகார்..

0
Follow on Google News

அண்மையில் சென்னையில் நடந்த ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கப்பவில்லை என புகார் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வழக்குப்பதிவு செய்த போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சர்ச்சைக்கு தானே பொறுப்பேற்ற ஏ.ஆர். ரஹ்மான் டிக்கெட் பணத்தை திரும்பி கொடுத்து வந்தார். மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பிரச்சனை அடங்குவதற்குள் ஏ.ஆர். ரஹ்மான் மீது மற்றுமொரு புகார் எழுந்துள்ளது. 2018-ம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய முன்பணத்தை அவர் திருப்பித் தரவில்லை’ என அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்திருக்கும் புகார்க் கடிதத்தில், “2018-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் ஆர்.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, அவருக்கு முன்பணமாக ரூ. 29.5 லட்சம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநாடு நடத்த சரியான இடம் மற்றும் தமிழ்நாடு அரசின் அனுமதி கிடைக்காததால் மாநாடும் இசை நிகழ்ச்சியும் ரத்தாகின. அப்போது, நிகழ்ச்சிக்காக ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ.29.5 லட்சத்தைத் திருப்பிப் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலும் முன்பணத்தைத் திரும்பக் கொடுக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் முன்தேதியிட்ட காசோலை வழங்கப்பட்டது.

ஆனால், அந்தக் காசோலையை வங்கியில் கொடுத்தபோது சம்பந்தப்பட்ட அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை ஏ.ஆர்.ரஹ்மானையும், அவரின் செயலாளர் செந்தில் வேலவனையும் தொடர்புகொண்டும் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, முன்பணத்தைத் திருப்பித் தராத ஏ.ஆர்.ரஹ்மான் மீதும், அவரின் செயலாளர் செந்தில் வேலவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மீதான புகாருக்கு அவரின் செயலாளர் செந்தில் வேலவன் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், “ASICON 2018 – CHENNAI’ என்ற மூன்று நாள் நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக எங்கள் நிறுவனத்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் தொடர்புகொண்டார்கள். நாங்கள் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி அனுமதி பெற்றோம்.

அதன் பிறகு நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக அவரின் பெயரில் ரூ.25 லட்சமும், இதர கலை நிகழ்ச்சிக்காக ரூ.25 லட்சமும் என 2 காசோலைகளை அவர்கள் வழங்கினார்கள். அப்போது நடந்த பேச்சுவார்த்தையிலும், அதைத் தொடர்ந்து போடப்பட்ட ஒப்பந்தத்திலும் `நீங்களாகவே நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்துசெய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் திரும்பத் தரப்படாது’ என குறிப்பிட்டிருந்தோம்.

அதன் அடிப்படையில் நிகழ்ச்சியை அவர்கள் ரத்துசெய்தால், முன்பணத்தைத் திரும்ப வழங்கத் தேவையில்லை என்ற நிபந்தனை உட்பட அனைத்து விஷயங்களும் இணைக்கப்பட்டு, அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த இசை நிகழ்ச்சியை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினரால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு, அவர்கள் இந்த இசை நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டனர். அப்படி இருந்தபோதிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் காசோலை அந்த அமைப்புக்கு திருப்பி வழங்கப்பட்டுவிட்டது.

அந்த அமைப்பினரே இசை நிகழ்ச்சியை ரத்து செய்த நிலையில், ஒப்பந்தத்தை கடந்தும் நட்பு ரீதியில் இரக்கப்பட்டு ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் வழங்கப்பட்ட காசோலை திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது! இந்த நிலையில், தேவையில்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் நோக்கில் இந்தப் புகாரில் அவர் பெயரை இணைத்திருக்கின்றனர்.

ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட முன்தொகையைத் திருப்பி வழங்கத் தேவையில்லை. எங்கள்மீது கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் புகாரைச் சட்டப்படி எதிர்கொள்வோம். மேலும், அந்தச் சங்கத்தின் மீது விரைவில் நாங்கள் வழக்கு தொடர்வோம்!” என்று தெரிவித்திருக்கிறார்.