விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட தன்னுடைய திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமான பாலா, தற்போது சினிமாவிலும் செம்ம பிசியாக நடித்து வருகிறார் பாலா. வளர்ந்து வரும் நடிகரான பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு பெரும் வகையில் உதவி செய்து வருகிறார்.
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது தொடங்கி முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தி குடுப்பது வெண்டிலேட்டர் உட்பட உயிர்காக்கும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ தேவைக்காக மக்கள் பயன்படுத்த ஆட்டோ வழங்குவது என பல சமூக சேவைகளை செய்துவருகிறார் பாலா.
பாலா சிறந்த நடிகர், காமெடியன் என்பதை தாண்டி… மனிதநேயம் மிக்கவர் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய குடும்பத்திற்கு சேர்த்து வைப்பவர்கள் மத்தியில், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை, ஏழை எளிய மக்களுக்கு செலவழித்து வருகிறார் பாலா.
இதுவரை மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கிலும், ஆதரவற்றோருக்கு உதவும் நோக்கிலும், 4 ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ள பாலா, மழை வெள்ளம் சென்னை பகுதியை சூழ்ந்த போது , தன் கையில் இருந்த மொத்த பணத்தையும்… ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார். தன்னுடைய அம்மா சீட்டு போட்டு வைத்திருந்த பணத்தையும் எடுத்து செலவு செய்து, பலருக்கு உணவளித்தார்.
தன்னால் முடிந்த உதவிகளை செய்துவரும் பாலா, சமீபத்தில் ஒரு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்தார்.. அதுவும் மனு கொடுத்த 10 நாட்களுக்குள் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கி கொடுத்துள்ளாா். அதை தானே நேரில் சென்று திறந்துவைத்தும் சிறப்பு செய்துள்ள பாலாவின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலைகிராமத்தில் சாலை வசதி இல்லாமல் இருந்து உள்ளது. இதன் விளைவாக உடல் நலத்தால் பாதிக்கப்படுவோர் 7 கிலோ மீட்டர் மலை பாதையில் டோலி கட்டி செல்லும் நிலை இருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தியை அறிந்த பாலா அந்த கிராம மக்களுக்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்து உதவியை செய்து உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாலா, “இந்த கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஒரு கர்ப்பிணி பெண்ணை கயிறு கட்டி கீழே இறக்கியதாக ஒரு செய்தி பார்த்தேன். இங்கு வந்து பார்த்தபிறகு தான் தெரிந்தது, அப்படி கயிறு கட்டி இறக்கும்போது நிறைய பெண்களுக்கு பாதிவழியிலேயே பிரசவம் ஆகிவிடுறது என்று. இந்த கிராமத்துக்கு ஏறிவருவதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே இந்த ஐந்தாவது ஆம்புலன்ஸை இந்த கிராமத்துக்கு வழங்கியுள்ளேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தருபவர்களுக்கு மிக்க நன்றி.
உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். நான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆமாம், இருக்கிறார்கள் தான். அது அவமானம், கஷ்டம் ஆகியவை. இவையெல்லாம் என் பின்னால் இருந்ததால்தான் நான் இந்த உதவிகளை செய்து வருகிறேன். “எதிர்காலத்தில் நீ சிக்னல்ல பிச்சை எடுப்பாய். அப்போது கூட நான் உனக்கு பிச்சை போடாமல்தான் போவேன்” என்று சிலர் கமெண்ட் செய்கிறார்கள். நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ அதே சிக்னலில் நான் கொடுத்த ஆம்புலன்ஸும் வரும். எனவே எனக்கு அது ஒரு பிரச்சினை இல்லை” என்று தெரிவித்தார்.