இனிமேல் தான் ஜோவிகாவுக்கு புரியும்… கமல் இப்படி செய்திருக்க கூடாது… வேதனையை வெளிப்படுத்திய விசித்ரா கணவர்..

0
Follow on Google News

பிக்பாஸ் சீஸன் 7 சண்டைகளுக்கும் பிரச்னைகளுக்கும் பஞ்சமில்லாமல் இரண்டு வாரங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா, பிக்பாஸ் வீட்டின் இளம் போட்டியாளராக இருக்கிறார். அவர் பிக் பாஸ் மேடை ஏறும் போதே படிப்பில் தனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை எனவும் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நடிப்பில் டிப்ளமோ முடித்துள்ளதாகவும் கூறினார்.

இதே விஷயத்தை பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியாளர்களிடமும் கூறினார். அப்போது இடைமறித்த நடிகை விசித்ரா, குழந்தைகள் யாராக இருந்தாலும் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டியது அவசியம் எனக் கூறினார். பின்பு அடுத்தடுத்து போட்டியாளர்கள் ஜோவிகாவுக்கு அறிவுரை கூற, இதைப் பற்றி பேச விருப்பமில்லை என ஜோவிகா மறுத்துவிட்டார். இப்போது இந்த விஷயம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

இவருக்கும் நடிகை விசித்ராவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிக்பாஸ் வீட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பிக் பாஸ் வீட்டில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா படிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன. ஒன்பதாம் வகுப்போடு எனக்கு படிப்பு வரவில்லை என்று படிப்பை நிறுத்திவிட்டேன். படிப்பு மட்டும் தான் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை. அதை தாண்டி நிறைய திறமைகள் உள்ளன. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று ஜோவிகா கூறினார்.

இதற்கு விசித்ரா, யாராகயிருந்தாலும் அவர்களுக்கு அடிப்படை கல்வி அவசியம் என்று கூறினார். டாக்டர் ஆகு, என்ஜினியர் ஆகு என நான் சொல்லவில்லை. அடிப்படைக் கல்வி இருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்ய, பேங்க் போனால் என பல விஷயங்களுக்கு அது அவசியம் என விசித்ரா கூறுகிறார். இந்த விவகாரம் காரணமாக ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அதுமட்டுமின்றி விசித்ரா, சமுதாயத்தில் அடிப்படைக் கல்வி அவசியம் என்று பேசியதோடு, ஜோவிகாவால் தமிழை எழுதப் படிக்கத் தெரியுமா என்று சவால்விடுக்கும் தொனியில் பேசினார். அதற்குப் பிறகு பல கருத்துப் பரிமாற்றங்கள், கருத்து வேறுபாடுகள் நடந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து பேசிய கமல்ஹாசன், “ உங்களுக்கு பரிந்து பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உயிரைக்கொடுத்தாவது படிக்க வேண்டும் என்று சொல்வது முக்கியமில்லை என்று நினைக்கிறேன். கல்விதான் கலங்கரை விளக்கம். ஆனால், அதற்கு முதலில் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிய வேண்டும் அல்லவா?. நான் காட்டில் இருந்து கொண்டு கலங்கரை விளக்கத்தை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. கை மண்ணளவை வைத்துக்கொண்டு, இதுதான் கல்வி என்று சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது.

என்னை எல்லாரும் நிறைய படிக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம் விட்டதை பிடிக்கிறேன் என்று சொல்கிறேன். அந்த வகையில், ஜோவிகா எப்போது விட்டதை பிடிக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்யட்டும். அதற்காக நான் படிக்கவே வேண்டாம் என்று தோளை குலுக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் ஜோவிகா போல, எனக்கு படிப்பு வரவில்லை, என்னை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்களை, கொஞ்சம் விடத்தான் செய்ய வேண்டும். கற்றல் விதி இருக்கலாம். கற்றல் வதை இருக்கக்கூடாது. நீங்கள் சொன்னது உங்கள் நியாயம். அவர் சொன்னது அவருக்கான நியாயம்” என்று பேசினார்.

தற்போது இதற்கு விசித்திராவின் கணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, விசித்திரா ஒன்றும் கல்வி முக்கியம் என்று பேசவில்லை. அவர் பேசியது அடிப்படைக் கல்வி முக்கியம் என்பது தான். நாம் என்னதான் அலட்சியம் செய்தாலும் ஒரு சில வயதிற்கு பிறகு கல்வி முக்கியம் என்பது புரிய வரும். அதே நேரம் பல கோடி பேர் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் கல்வி குறித்து சரியான விளக்கத்தினை கமலஹாசன் அளிக்கவில்லை. இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது’ என்று பேசியுள்ளார்.

மேலும், “நான் ஜோவிகாவை குற்றம் சொல்லவில்லை. அது குழந்தை. பக்குவம் இல்லாமல் பேசுகிறது. அதே நேரத்தில் நான் இன்னும் இரண்டு பேரை கண்டிக்கிறேன். ஜோவிகா பேசும்போது மாயா விசில் அடிப்பது. இதெல்லாம் சரியான செயலா? அதேபோன்று பவா செல்லதுரை படிப்பு முக்கியமில்லை என்று பேசுவது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. ஒரு எழுத்தாளர் இப்படி பேசலாமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதுமட்டுமின்றி, “கமல்ஹாசன் படிப்பின் முக்கியத்துவத்தை அந்த நிகழ்ச்சியில் சரியாக விளக்கியிருந்தால் பல பேருக்கு உத்வேகம் கொடுத்திருக்கும். ஆனால் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காக அவர் சரியாகவே எதுவும் பேசவில்லை” என்று பேசியுள்ளார்.